பினாங்கு லிட்டல் இந்தியா இந்தியர்களின் பாராம்பரியத்தைப் பறைச்சாற்றும் சிறந்த வியாபாரம் மற்றும் சுற்றுலாத் தளமாகத் திகழ்கிறது. பினாங்கில் அமைந்துள்ள லிட்டல் இந்தியாவில் ஆடை, அழகுச் சாதனங்கள், மலிகைப் பொருட்கள், நகை ஆபரணங்கள், உணவு என பல்வகை கடைகள் அவ்விடத்தில் ஒருங்கே அமைந்துள்ளன. தீபாவள் என்றாலே பினாங்கு லிட்டல் இந்தியாவிற்கு பினாங்கு மட்டுமின்றி கெடா, பேரா, பெர்லிஸ் மக்கள் புற்றீசல் போல் வருகையளிப்பர். ஆனால் இந்த ஆண்டு 1 ஏப்ரல் தொடங்கி பொருள் சேவை வரி (ஜி.எஸ்.தி) அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து வியாபாரத்தில் ஏறக்குறைய 70% வீழ்ச்சி அடைந்ததாக அழகுச் சாதன கடையின் உரிமையாளர் திரு தனராஜ் தெரிவித்தார். இந்த ஜி.எஸ்.தி செயல்முறையினால் விற்பனைப் பொருட்களின் விலை அதிகரிப்பதால் பொது மக்கள் அதிருப்தி தெரிவிப்பதோடு வாங்க தயங்குகின்றனர்.
தற்போது நிலவி வரும் நாணய மதிப்பின் வீழ்ச்சியும் வியாபாரத் துறைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக ரமணி ஸ்டோர் நிறுவனத்தைச் சார்ந்த திரு சந்திரசேகரன் தெரிவித்தார். நாணய மதிப்பு வீழ்ச்சியடைவதால் மக்களின் செலவீனங்கள் அதிகரிக்கப்படுகிறது. எனவே, மக்கள் பொருட்கள் வாங்க தயக்கம் கொள்கின்றனர் என்றார். தீபாவளி கொண்டாட்டத்திற்கு சில நாட்களே இருக்கும் வேளையில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்ப்பார்ப்பதாகக் கூறினார்.
சில ஆண்டுகளாகவே இந்திய விற்பனை விழா பினாங்கு மாநிலத்தில் அதிகமாக இடம்பெறுவதால், அதில் அந்நிய நாட்டவர்கள் சுலபமாக குறுகிய காலத்தில் அதிகமான இலாபம் ஈட்டி சென்று விடுகின்றனர் என்றார் இந்திய பாரம்பரிய ஆடை விற்பனையில் ஈடுபட்டுள்ள திருமதி உமாதேவி. இதனால் லிட்டல் இந்திய வியாபாரிகள் அதிகமாகப் பாதிக்கப்படுக்கின்றனர் என்றார்