கோவிட்-19 பெருந்தோற்று காரணமாக வியாபாரத்துறையில் கடிமான சூழலை எதிர்நோக்கிய பினாங்கு லிட்டல் இந்தியா வர்த்தகர்கள் தற்போது வியாபாரம் மீட்சி நிலை அடைந்து வருவதை கண்கூடாக காண முடிகிறது.
இந்த கடிமான சூழலில் வியாபாரத் துறையில் மீட்சிநிலை அடைந்து வரும் வர்த்தகர்களின் கருத்துகள் அறிவதற்கும்; வருகின்ற தீபாவளி பண்டிகையின் போது எதிர்நோக்கும் சலால்கள் பற்றியும் முத்துச் செய்திகள் நாளிதழ் நிருபர்கள் நேரடியாகச் சென்று கருத்து களத்தில் ஈடுப்பட்டனர்.
கடந்த மார்ச்,18-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் (பி.கே.பி) தனது வணிக விற்பனையில் 40 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளதாக உமையாள் டெக்ஸ்டைல்ஸ் சென்.பெர்ஹாட் நிறுவன உரிமையாளர் டத்தோ அசோக் குமார் கூறினார். கடந்த ஜூன் மாதம் மாநிலம் கடந்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட பின்னர் வியாபாரத்தில் முன்னேற்றம் காணத் தொடங்கியது, என்றார்.
“கோவிட்-19 எனது வியாபார விற்பனையைப் பாதித்தது மட்டுமின்றி, வழக்கமாக இந்தியாவின் பல மாநிலங்களுக்குப் பயணம் செய்து தனித்துவம் மிக்க ஆடை அணிகள், சேலைகள், பஞ்சாபிகள் என தேர்வுச் செய்து மலேசியாவிற்கு இறக்குமதி செய்யும் எனது வழக்கமாக நடவடிக்கையிலும் தடை ஏற்பட்டுள்ளது,” என அசோக் கூறினார்.
கோவிட்-19 தாக்கத்தால் போக்குவரத்து துறை அதிகமளவில் பாதிக்கப்பட்டதால் இந்தியாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கப்பல் கட்டணங்கள் அதிகரித்துள்ளது. இருப்பினும், வருகின்ற தீபாவளி பண்டிகை காலக் கட்டத்தில் ஆன்லைன் ஆர்டர் மூலம் ஜவுளி இறக்குமதி செய்யப்படும். இந்த பண்டிகை காலக்கட்டத்தில் வியாபாரம் முன்னேற்றம் காணும் என அசோக் நம்பிக்கை தெரிவித்தார்.
“1968-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த டெக்ஸ்டைல்ஸ் நிறுவன வரலாற்றிலே நீண்ட காலம் ஏறக்குறைய 3 மாதங்கள் செயல்படாமல் மூடப்பட்டது இதுவே முதல் முறையாகும். ஏனெனில், இந்த நிறுவனம் ஒரு வருடத்திற்கு மூன்று நாட்கள் அதாவது தைப்பூசம் மற்றும் தீபாவளி பண்டிகையின் போது மட்டுமே மூடப்படும்,” என்றார்.
வி.கே.என் ஜுவல்லர்ஸ் & எம்.டி சென்.பெர்ஹாட் எனும் தங்க ஆபரண நிறுவனம் பி.கே.பி அமலாக்கத்தால் கடைகள் திறக்க முடியாததால் இந்நிறுவனம் ஆன்லைனில் தனது வியாபாரப் பயணத்தை தொடங்கியது. ஆன்லைன் வியாபாரத்தில் மக்களின் ஆதரவு ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது.
“இந்த தங்க வியாபாரம் கலாச்சார வியாபாரமாகக் கருதப்படுகிறது, ஏனெனில், வாடிக்கையாளர்களிடம் இருந்து தினசரி தங்க நகைக்கான ஆர்டர் மட்டுமின்றி திருமணம், பரிசம், பெயர் சூட்டு விழா, பிறந்தநாள் போன்ற சுப காரியங்களுக்கான ஆர்டர்களும் பெறுகிறோம் என இந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான யுவபாலன் சிவசாமி கூறினார்.
“ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் எங்கள் விற்பனை மிகவும் சரிவு நிலை கண்டது. ஆனால் ஜூன் மாதத்தில் வியாபாரத்தில் வேகம் காணத் தொடங்கியது, என்றார்.
பினாங்கு மாநில அரசு பல்வேறு துறைகளை கட்டங்கட்டமாக செயல் பட அனுமதி வழங்கியதற்கு நன்றிக் கூற கடமைப்பட்டுள்ளேன். பொது மக்கள் அனைவரின் நன்மை கருதி நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை(எஸ்.ஓ.பி) பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அனைவரின் பாதுகாப்பிற்காக இதுபோன்ற வளாகங்களுக்குச் செல்லும்போது சமூக இடைவெளியை பின்பற்றவும்; முகக் கவசத்தையும் அணியவும் என யுவபாலன் வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
1936 முதல் செயல்படும் வி.கே.என் ஜுவல்லர்ஸ், தங்க நகைகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. இதில் தங்க நகைகள் விற்பனை மட்டுமின்றி பழுதுபார்ப்பு மற்றும் மறுவடிவமைப்பு போன்ற சேவைகளும் அடங்கும்.
தற்போது தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து கொண்ட செல்கிறது. இன்றைய (3/8/2020) நிலவரம் படி ஒரு கிராமிற்கு ரிம266-க்கு விற்கப்படுகிறது . இது குறித்து கேள்வி எழுப்பிய போது, பொது மக்கள் அவர்களின் வரவு செலவுக்கு ஏற்ப தங்கம் வாங்குவர். விலை ஏற்றத்தால் அவர்கள் வாங்கும் தங்கத்தின் எடையில் மாற்றம் ஏற்படும் என விளக்கமளித்தார்.
இந்த கடையில் விற்கப்படும் தங்கத்தின் மிக உயர்ந்த தரம் 22 கேரட் 916-ரக தங்கமாகும்.
15 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஏ.ஆர்.ஆர் கோல்டு கவரிங் சில்லறை & மொத்த வியாபார நிறுவனம் கோவிட்-19 தாக்கத்தால் ஏறக்குறைய 50 விழுக்காடு வியாபார நஷ்ட்டத்தை எதிர்நோக்கியது.
“மத்திய அரசாங்கம் சுப காரியங்கள் செய்ய அனுமதி வழங்கிய சூழ்நிலையில் வியாபாரம் முன்னேற்றம் காண தொடங்கியுள்ளது,” என ஏ.ஆர்.ஆர் நிறுவன உரிமையாளர் தனராஜ் முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு கூறினார்.
இவர் கோல்டு கவரிங் வியாபாரம் மட்டுமின்றி ஜவுளி வியாபாரமும் நடத்தி வருகிறார். ஜவுளி வியாபாரத்தில் மிகுந்த நஷ்ட்டம் அடைந்ததாக வருத்தத்துடன் கூறினார். பி.கே.பி அமலாக்கத்தால் வியாபாரம் முடக்கப்பட்ட சூழலில் நிறுவன உரிமையாளர் என்ற முறையில் கடை வாடகை, ஐந்து தொழிலாளர்களின் சம்பளம் ஆகியவை கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது என்பது மறுப்பதற்கில்லை.
மேலும், அதிகமான வேலை இழப்பு, பணி நீக்கம், தொழிற்சாலை அடைப்பு ஆகிய கூறுகள் பொது மக்களிடையே பணப்புலக்கத்தை குறைத்துள்ளது. எனவே, தற்போது வாடிக்கையாளர்களின் வருகையும் குறைவாகவே உள்ளது.
பொதுவாகவே, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி விற்பனைக்காக இந்தியாவிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கோவிட்-19 தாக்கத்தால் ஏற்றுமதி இறக்குமதியில் சில சிக்கல்கள் எழுவதால் புதிய ரக பொருட்கள் ஆர்டர் செய்யவில்லை, என்றார்.