
கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கி பினாங்கு மாநிலத்தில் ‘மைஸ்‘ (கூட்டங்கள், பாராட்டு விழா, மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) சம்பந்தமான நிகழ்வுகள் அதிகமாக இடம்பெறுவதை முன்னிட்டு மாநில அரசு இந்தத் துறையை மேம்படுத்தும் பொருட்டு ‘பினாங்கு மாநாடு மற்றும் கண்காட்சி பணியகம்‘ அமைத்தது என அதன் தலைமை நிர்வாக இயக்குநர் திரு அஸ்வின் தெரிவித்தார்.
பினாங்கு மாநிலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மாநாடு, கண்காட்சிகள், விருந்தோம்பல் நிகழ்வு நடத்துவதற்கான சிறப்பு அம்சங்கள் பற்றி திரு அஸ்வினிடம் முத்துச் செய்திகள் நாளிதழ் நடத்திய நேர்காணலில் கேள்வியாகத் தொடுக்கப்பட்டது.
பினாங்கு மாநிலம் என்றாலே அதன் தனித்துவம் குறிப்பாக யுனேஸ்கோ புகழ்ப்பெற்ற ஜோர்ச்டவுன் பாரம்பரியத் தளம், கலாச்சாரம். பல்வகையான உணவு பதார்த்தங்கள், தீவுப்பகுதி மற்றும் பெருநிலப்பகுதி என்ற இரண்டினையும் தொடர்புப்படுத்தும் வகையில் போக்குவரத்துக்கு இரண்டு பாலங்கள் உள்ளன; இயற்கை வளம் மிக்க கடற்கறை என பல வசதிகளையும் மகத்துவத்தையும் பெற்று தனித்து நிற்கிறது என திரு அஸ்வின் பதிலளித்தார்.
‘பினாங்கு மாநாடு மற்றும் கண்காட்சி பணியகத்தின்‘ கீழ் கடந்த ஆண்டு 1,251 வணிகம் சார்ந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன் மூலம் மாநிலத்திற்கு ஏறக்குறைய ரிம808 லட்சம் பொருளாதர வளர்ச்சியின் உந்துகோளாகப் பெறப்பட்டது. இந்த பணியகத்தின் கீழ் கடந்த 2016-ஆம் ஆண்டு தொழில்துறை நிகழ்வு மாநாடு (BE@Penang) நடத்தப்பட்டு பினாங்கில் செயல்படும் பல துறை சார்ந்த நிறுவனங்களுடன் இணைந்து ”பினாங்கு அணி” உருவாக்கப்பட்டது.
2018-ஆம் ஆண்டு பினாங்கு வணிக சுற்றுலாத் துறையில் 30% கூடுதல் வளர்ச்சி பெற இலக்கு கொண்டுள்ளதாக மேலும் சொன்னார். இந்த ஆண்டு பல அனைத்துலக மாநாடுகள், நிகழ்வுகள் பினாங்கு மாநிலத்தில் ஏற்று நடத்த முற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
பினாங்கு பணியகத்தின் வெற்றி மகுடமாக வருகின்ற 2019-ஆம் ஆண்டு நடைப்பெறவிருக்கும் ”கடலுணவு மாநாடு 2019” திகழ்கிறது. 50 ஆண்டுகளாக நடைபெறும் இந்த மாநாட்டை ஏற்று நடத்தும் முதல் ஆசிய நாடாக மலேசியா குறிப்பாக பினாங்கு மாநிலம் எனக் குறிப்பிடுவதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார்.