ஜார்ச்டவுன் – பினாங்கு வீட்டுவசதி வாரியம் வருகின்ற 2030-க்குள் 220,000 யூனிட் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை வழங்குவதில் மாநிலத்தின் முயற்சிகளை மேம்படுத்த அமைக்கப்பட்டுள்ளது.
பினாங்கு வீட்டுவசதி வாரியம் இந்த ஆண்டு ஜனவரி முதல் அதன் முழு செயல்பாட்டை தொடங்கியது.
பினாங்கு வீட்டுவசதி வாரியம்
தீவில் தொடங்கவிருக்கும் முதல் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீட்டுவசதி திட்டத்தில் பங்கேற்க திறந்த குத்தகை முறையில் ஆர்வமுள்ள ஒப்பந்தக்காரர்கள் இந்த மாத இறுதிக்குள் அழைக்கப்படுவர் என்று மாநில வீட்டுவசதி, உள்ளாட்சி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார்.
இந்த முயற்சி செயல்படுத்தவிருக்கும் பல முயற்சிகளின் தொடக்கமாகும் என்று ஜெக்டிப் கூறினார்.
“இந்த திட்டம் பாயான் பாரு, புக்கிட் கெடுங்கில் அடையாளம் காணப்பட்டுள்ள
7.6 ஏக்கர் நிலப்பரப்பில் 253 குறைந்த நடுத்தர மலிவு விலை வீடுகள் மற்றும் 1,014 வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் கட்டப்படும்.
“குறைந்த நடுத்தர மலிவு விலை வீடுகள் ரிம72,500 க்கும், வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் ரிம270,000 க்கும் விற்கப்படும்.
“நீச்சல் குளம், உடற்பயிற்சி அறை, பல்நோக்கு மண்டபம் மற்றும் குழந்தைகளின் விளையாட்டு மைதானம் போன்ற பொது வசதிகள் இங்கு அமைக்கப்படும்.
“21 யூனிட் மூன்று மாடி வணிக கட்டிடம் இத்திட்டத்தில் கட்டப்படும்,” என்று ஜெக்டிப் கொம்தாரில் நடைபெற்ற மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
இத்திட்டம் 2022 ஜனவரியில் கட்டிடப் பணிகள் தொடங்கப்பட்டு 2025 ஆம் ஆண்டில் நிறைவுப்பெறும் என்று எதிர்ப்பார்ப்பதாக அவர் கூறினார்.
2008 முதல் இன்று வரை மொத்தம் 119,116 யூனிட் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் நிறுவப்பட்டுள்ளதாக ஜெக்டிப் கூறினார்.
“அதில் மொத்தம் 38,149 கட்டப்பட்டும், 18,519 கட்டுமானத்திலும், 62,448 கட்டுவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது,” என ஜெக்டிப் விவரித்தார்.