பினாங்கு2030 இலக்கு 47% அடைவுநிலை

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் அதன் பினாங்கு2030 இலக்கின் அடைவுநிலையை ஐந்தாண்டு சாதனை கையேடாக அதிகாரப்பூர்வ வெளியீடு செய்தது. பினாங்கு2030 இலக்கின் தற்போதைய முன்னேற்றம் குறித்து பொதுமக்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ள இந்த கையேடு உதவுகிறது என்று முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.

பினாங்கு2030 இலக்கு ‘தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்குதல்’ எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.
“இது பினாங்கு மாநிலம் முன்னேற்றத்தை நோக்கி சரியான பாதையில் செல்கிறது என்பதை உறுதிப்படுத்துவதும் ஆவணமாகத் திகழ்கிறது.

“பினாங்கு2030 இலக்கு கடந்த 2018 ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து, எங்களின் கடின உழைப்பு மற்றும் கூட்டு அர்ப்பணிப்பின் பயனாக இந்த இலக்கின் வியூக முன்னெடுப்புகளின் அடிப்படையில் 47% சாதனையை எங்களால் அடைய முடிந்தது என்பதை இன்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

“இந்த 47 விழுக்காட்டில், மொத்தம் 210 திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன அல்லது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
“இதில் வீடமைப்புத் திட்டங்கள், பருவநிலை மாற்றம், பொருளாதாரம், தொழில்நுட்பம், டிஜிட்டல் மயமாக்கல், குடும்பம், இளைஞர்கள் அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவம் போன்ற திட்டங்களும் அடங்கும்.

“மேற்கண்ட அனைத்து சாதனைகளையும் சாத்தியமாக்குவதற்கு பங்களித்த அனைத்து மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாநில ஏஜென்சிகள் மற்றும் மாநில பொது ஊழியர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என இன்று தி டாப் கொம்தாரில் ‘எழுச்சி பினாங்கு2030’ எனும் கையேடு வெளியீட்டு விழாவின் போது முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.

மேலும், மாநிலச் செயலாளர் டத்தோ முகமட் சாயுதி பாக்கர், முதலாம் துணை முதலமைச்சர் டத்தோ அகமது சாக்கியுடின் அப்துல் ரஹ்மான் மற்றும் இரண்டாம் துணை முதலமைச்சர் முனைவர் பேராசிரியர் டாக்டர் ப. இராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வை, அதன் விவரங்கள், தற்போதைய முன்னேற்றம் மற்றும் சாதனைகள் பற்றிய விரிவான தகவலுக்கு, https://penang2030.com/ என்ற இணையதள அகப்பக்கத்தை அணுகுமாறு வலியுறுத்தினார்.
“பினாங்கு2030 இலக்கின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட பல்வேறு பெருந்திட்டங்கள் பற்றிய தகவல்களை பினாங்கு2030 இணையதள அகப்பக்கத்தை அணுகலாம்.

“அந்த இணையதள அகப்பக்கத்தில், பினாங்கு2030 ‘Dashboard’ எனும் சிறப்பு அமைப்பு இடம்பெறுகிறது.

“மாநில அரசாங்கம் பொது மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில் இந்த Dashboard அமைப்பு இடம்பெறுகிறது.
“பினாங்கு ஒரு வெளிப்படையான அரசு நிர்வாகத்தைக் கொண்டிருப்பதால், அதனால் பொது மக்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்க முடிகிறது. ஏனென்றால், இந்த Dashboard மாநில அரசாங்கத்தின் சாதனைகளைத் தெளிவாக சித்தரிக்கிறது.

“எனவே, பொதுமக்கள் மாநில மக்களின் நலனுக்காக தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் கூட வழங்கலாம்,” என்று அவர் கூறினார்.

முதலமைச்சரின் கூற்றுப்படி, அடுத்த ஏழு ஆண்டுகளில் பினாங்கு2030 இலக்கை நனவாக்க மாநில அரசு தனது முயற்சிகள் மற்றும் கடமையை செவ்வன தொடரும்.

“தற்போதைய மாநில அரசாங்க தலைமைத்துவம் அனைத்து தரப்பினரின் ஆதரவின் பயனாக கோவிட் -19 தொற்றுநோய் தாக்கத்திலிருந்து சிறந்த நிர்வாக்கத்தின் பேரில் மீட்சிப் பெற்றது,” என்று அவர் கூறினார்.

“இந்த ஐந்து ஆண்டுகளில் நேர்மையுடன் கூடிய நிர்வாகம், மக்கள் நலன், உள்கட்டமைப்பு வசதிகள், சுற்றுச்சூழல் அமைப்பு சங்கிலி உருவாக்கம் ஆகியவை மேம்பாடுக் கண்டது. தற்போது, தொழில்நுட்பம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பினாங்கை மனித வள மேம்பாட்டின் அடிப்படையில் விவேக மாநிலமாக உருமாற்றம் காண பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.

“நாங்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் செதுக்கப்பட்ட பினாங்கு2030 இலக்கை நனவாக்கும் வகையில் தொடர்ந்து பயணிப்போம்,” என்றார்.

நேசமிகு பினாங்கு மாநிலத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கவும், உலக அரங்கில் பிரசித்து திகழச் செய்யவும் அனைத்து தரப்பினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதன் மூலம், பினாங்கு2030 இலக்கை அடைய முடியும் என பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான கொன் இயோவ் கேட்டுக் கொண்டார்.