பினாங்கு2030 இலக்கை நோக்கி முதல் அடைவுநிலை அட்டை அறிமுகம்

Admin

ஜார்ச்டவுன் – “மாநில அரசின் மூன்று ஆண்டுகால அடைவுநிலை அட்டை,
இம்மாநிலத்தில் பினாங்கு2030 இலக்கை முன்னெடுத்துச் செல்லும் அடைவுநிலையைச் சித்தரிக்கின்றது. இந்த மூன்று ஆண்டுகால அடைவுநிலை அட்டை (2018-2021) மாநில அரசு அதன் இலக்கை நோக்கி பயணிப்பதை உறுதிச் செய்கிறது. மாநில அரசு 75 விழுக்காடு அதன் அடைவுநிலை பெற்றிருந்தாலும் இன்னும் பல துறைகள் மேம்பாடுக் காண உத்வேகம் கொள்வது அவசியம்.

“இந்த அடைவுநிலை அட்டையில் கடந்த 2018 முதல் 2021-ஆம் ஆண்டு வரை மேற்கொண்ட திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தால் மாநில அரசு அதன் நிதி ஒதுக்கீடு மற்றும் மூலதனத்தை முழுமையாக இந்நோய் பரவாமல் தடுப்புதற்கும், பொருளாதார மீட்சித் திட்டம் செயல்படுத்தவும் இணக்கம் கொண்டது,” என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் மாநில அரசின் மூன்று ஆண்டுகால அடைவுநிலை அட்டை அறிவிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார்.

மாநில அரசு அதன் முதல் அடைவுநிலை அட்டையில் வீடமைப்புத் திட்டம், பருவநிலை மாற்றம், பொருளாதாரம், தொழில்நுட்பம், டிஜிட்டல் பயன்பாடு, குடும்பம், பாலினச் சமத்துவம் மற்றும் இளைஞர் மேம்பாடு ஆகியவற்றை செயல்படுத்த மேற்கொண்ட திட்டங்கள், நடவடிக்கைகள் வரையறுக்கப்படுள்ளன. மாநில அரசு அதன் இலக்கை நோக்கி பயணிக்க மாநில அரசு தலைவர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்பு மூலம் செயல்படுத்தப்படுகிறது.

பினாங்கு2030 உருமாற்றுத் திட்டத்தின் கீழ் இடம்பெறும் மாநில அரசின் மீட்சித் திட்டமானது ‘பினாங்கு2030 அடைவுநிலை துரிதப்படுத்தல்’ என்ற குறிக்கோளுடன் செயல்படுகிறது. உள்ளூர் திட்டம்; சமூக மேம்பாட்டுத் திட்டம்; தொழிற்துறை பங்களிப்புத் திட்டம் ஆகிய மூன்று பிரதான கூறுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.

“உள்ளூர் திட்டத்தின் கீழ் டிஜிட்டல் புத்தாக்க தளத்தை உருவாக்கி அதன் அறிவு அடிப்படையிலானப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் பொருளாதாரம், தொழில்நுட்ப பரிமாற்றம், மற்றும் பொது அறிவை மேம்படுத்த அடித்தளமாகத் திகழ்கிறது.

“சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பொது மக்கள் அரசு தொடர்பு நிறுவனங்களான (Government Link Agencies) பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம், பினாங்கு இளைஞர் மேம்பாட்டு வாரியம் மற்றும் பல நிறுவன ஒருங்கிணைப்பில் சமூக மேம்பாட்டை வலுப்படுத்துகிறது.

“மாநில அரசு, பொது மக்கள் மற்றும் தனியார் துறை உடனான ஒருங்கிணைப்பு தொழிற்துறை மேம்பாட்டுக்கு வித்திடுவதோடு மாநிலத்தின் நிலையான வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது,” என முதல்வர் சாவ் தெரிவித்தார்.