பிறையில் ஏடிஸ் கொசு, டிங்கி காய்ச்சல் விழிப்புணர்வு பட்டறை

Admin

பிறை – அண்மையில், பிறை சமூக நிர்வாக மேம்பாட்டுக் கழகம்(MPKK) ஏற்பாட்டில் பிறை மகளிர் மேம்பாட்டுக் கழகம்(JPWK), பண்டார் பெர்டா சுகாதார கிளினிக், மத்திய செபராங் பிறை COMBI அமைப்பு இணை ஆதரவில் மாணவர்களுக்கான ஏடிஸ் கொசு மற்றும் டிங்கி காய்ச்சல் விழிப்புணர்வு பட்டறை நடைபெற்றது.

இந்தப் பட்டறை பிறை பாலர்பள்ளி மாணவர்களுக்கு அதன் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் 55-க்கும் மேற்பட்டப் பள்ளி மாணவர்களுடன் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

“தற்போது டிங்கி காய்ச்சல் வழக்குகள் அதிகமாக பதிவு செய்யப்படுகிறது, மேலும், இதனால் உயிரிழப்புகளும் தொடர்ந்து ஏற்படுகிறது என்பது மறுப்பதற்கில்லை.

எனவே, மாணவர்களுக்கு சிறு வயது முதல் ஏடிஸ் கொசு இனவிருத்தி குறித்து விழிப்புணர்வு வழங்குவது அவசியம்.

“டிங்கி கொசுவிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி எதுவும் இல்லை. மாறாக, கொசுக்களை ஒழிப்பது ஒன்றே வழி. கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்,” என பிறை MPKK தலைவர் ஸ்ரீ சங்கர் தமது வரவேற்புரையில் இவ்வாறு கூறினார்.

“மத்திய செபராங் பிறை சுகாதார கிளினிக் அதிகாரிகள் மற்றும் மத்திய செபராங் பிறை COMBI அமைப்புத் தலைவர் துரைசிங்கம் ஏடிஸ் கொசு மற்றும் டிங்கி காய்ச்சல் குறித்து மாணவர்களுக்கு எளிய முறையில் புரியும் வண்ணம் பட்டறையைச் சிறப்பாக வழிநடத்தினர்.

மேலும், ஏடிஸ் கொசுவின் தோற்றத்தை மாணவர்கள் நன்கு அறியும் வகையில் அது குறித்த வர்ணம் தீட்டும் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டது.

“ஏடிஸ் கொசு இனவிருத்தி செய்யாமல் தடுக்க வீட்டைச் சுற்றி குறிப்பாக பழைய டயர், பூச்சாடிகள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் கேன்களில் தண்ணீர் தேங்க விடக் கூடாது,” என COMBI அமைப்புத் தலைவர் துரைசிங்கம் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.

மேலும், குளிர் காய்ச்சல், தலைவலி, கண்ணை சுற்றி வலி, முதுகு வலி, பின்னர் கடுமையான கால் மற்றும் முட்டு வலி போன்ற சில
டிங்கி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் முதலில் தெரிவிக்க வேண்டும். அடுத்த கட்ட நடவடிக்கையாக மருத்துவரை அணுக வேண்டும் என தெரிவித்தார்.

MPKK பிறை ஆதரவில் இந்தப் பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்குப் பங்கேற்பு நற்சான்றிதழும், 50 கொசு விரட்டி ஸ்ப்ரே போத்தல்களும் வழங்கப்பட்டன.
வர்ணம் தீட்டும் போட்டி வெற்றியாளர்கள் மற்றும் கேள்வி பதில் அங்கத்தில் சரியாக பதில் அளித்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.