பிறை – பிறை எம்.பி.கே.கே மற்றும் பிறை சேவை மையத்தின் ஏற்பாட்டில் மிக அதிகமான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழிநடத்தி வருகின்றது.
இத்திட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் தரப்பினரைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக மகளிர் உபரி வருமானம் பெறுவதற்கு உதவும் நோக்கிலான இந்த திட்டங்களை பிறை எம்.பி.கே.கே தலைவர் ஸ்ரீ சங்கர் தலைமையில் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அண்மையில் மகளிருக்கான மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு பயிற்சி நடத்தப்பட்டது.
சுமார் 12 வாரத்திற்கு நடைபெற்ற இப்பயிற்சி பட்டறையில் பிரசவத்திற்குப் பிந்தைய தாய், சேய் பராமரிப்பு மற்றும் பாரம்பரிய வைத்திய முறைகள் குறித்து தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டு பயிற்சிகளும் கற்று தரப்பட்டது.
அண்மையில் தாமான் கிம்சார் பல்நோக்கு மண்டபத்தில் மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு பயிற்சி பட்டறையின் பட்டமளிப்பு விழா வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ சுந்தராஜு தலைமையில் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கிய டத்தோ ஶ்ரீ சுந்தராஜு கூறுகையில், “இந்த பயிற்சி சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இதன்வழி தாய்மார்கள், குழந்தைகளின் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வழிவகுக்கும்”, என்றார்.
பொதுவாக மக்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அதிகமான பிறை வாழ் மக்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் இது போன்ற முயற்சிகள் தொடரப்படும் என சுந்தராஜு நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து, இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைந்தவர்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ள தாய்மார்களுக்கு பிரசவத்திற்குப் பிந்தைய பயிற்சியை வழங்குவதற்கும் அதன் மூலம் உபரி வருமானம் பெறுவதற்கும் இந்த பயிற்சி துணைபுரியும் என்று ஸ்ரீ நம்பிக்கைத் தெரிவித்தார்.
“பெண்களின் திறமைகளைக் கண்டறிந்து அவர்கள் தொழில் தொடங்குவதற்கு உதவுவதற்கும், பணி புரிவதற்கு உதவுவதற்கும் இந்த பயிற்சித் திட்டம் வழிவகுக்கும். மேலும், சுய தொழில் தொடங்குவது, பணிக்கு செல்வது ஆகியவற்றுக்காக பெண்கள் இதன்வழி ஊக்குவிக்கப்படுகின்றனர்.
“இலாபம் தரக்கூடிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் குடும்ப வருமானத்தை உயர்த்தி, வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவ இப்பயிற்சி துணைப் புரியும்”, என ஏற்பாட்டு குழுத் தலைவர் ஶ்ரீ சங்கர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த பயிற்சியை இலவசமாக நடத்துவதற்கு தங்களுக்குத் பெரிதும் துணை புரிந்த மலேசிய அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு மற்றும் அதன் பொறுப்பாளர்களுக்கும் ஸ்ரீ நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக எம்.பி.எஸ்.பி கவுன்சிலர் பொன்னுதுரை கல்ந்து கொண்டு ஆதரவு நல்கினார்.
பிறை எம்.பி.கே.கே ஏற்பாட்டில் தையல் பயிற்சி பட்டறை, கைவினை மற்றும் சமையல் பட்டறை ஆகியவை மகளிர்களின் வளர்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்தினத்தன்று தையல் பயிற்சி பட்டறை மற்றும் மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு பயிற்சி திட்டத்தில் பங்கேற்ற மகளிர்களுக்கு சான்றிதழும் உபகரணங்களும் வழங்கப்பட்டது.