பிறை எம்.பி.கே.கே அதன் உறுப்பினர்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க சோக்சொ பங்களிப்பை செயல்படுத்தியுள்ளது

Admin
436402288 25316060621343302 4267764739463053990 n

 

பிறை – பினாங்கு மாநிலத்தில் செயல்படும் பிறை கிராம சமூக மேலாண்மை கவுன்சில் (எம்.பி.கே.கே) முதல் எம்.பி.கே.கே அதன் 15 உறுப்பினர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு அமைப்பு காப்புறுதி(Socso) பங்களிப்புகளை வழங்கியுள்ளது.

இந்நிகழ்ச்சியின் போது, வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு பிறை எம்.பி.கே.கே உறுப்பினர்களுக்கு சோக்சோ காப்புறுதி சான்றிதழ்களை வழங்கினார். அதே நேரத்தில் செபராங் பிறை சமூகப் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரி உஷா தேவி சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் (SPS) நன்மைகள் மற்றும் இழப்பீட்டுத் தொகை குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் பிறை எம்.பி.கே.கே உறுப்பினர்களுக்கு நோய், விபத்துக்கள் மற்றும் குறைபாடுகள் உள்ளிட்ட எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு எதிராக அவர்களுக்கு அடிப்படை நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது.

மேலும், விபத்து அல்லது ஊனம் ஏற்பட்டால் இழப்பீடு ஊதியம், மருத்துவக் கட்டணம் மற்றும் மறுவாழ்வுச் செலவுகளுக்கு நிதி உதவியும் இத்திட்டத்தின் வாயிலாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.

சுந்தராஜு தனது உரையின் போது, சொக்சோ SPS திட்டம் பற்றிய தகவல்களைப் பரப்புவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அனைத்து உறுப்பினர்களும் இத்திட்டத்தின் நன்மைகளை அறிந்து கொள்ளும் வகையில், பெரிய அளவிலான ரோட்ஷோக்களை ஏற்பாடு செய்வதில் சோக்ஸோவுடன் ஒத்துழைக்க பிறை எம்.பி.கே.கே-ஐ
அவர் ஊக்குவித்தார்.

இந்தப் பாதுகாப்பு வலையமைப்பில், மன அமைதியை வழங்குவதன் மூலம், பிறை எம்.பி.கே.கே உறுப்பினர்கள், சாத்தியமான அபாயங்களைப் பற்றி தேவையற்ற கவலையின்றி தங்கள் பொறுப்புகளில் கவனம் செலுத்த முடியும்.

பிறை வட்டாரத்தில் உள்ள மற்ற நான்கு எம்.பி.கே.கே கவுன்சில்களிலும், ஒரு பினாங்கு இளைஞர் செயற்குழு (Jawatakuasa Belia Pulau Pinang) மற்றும் ஒரு பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டு செயற்குழு (JPWK) உட்பட அனைத்து சமூக சேவையாளர்களுக்கும் Socso பாதுகாப்பை விரிவுப்படுத்த முடியும் என்று பிறை எம்.பி.கே.கே தலைவர் எஸ்.ஸ்ரீ சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.

“ஒரு உறுப்பினருக்கான வருடாந்திர கட்டணம் ரிம233.30 ஆகும். அரசாங்கம் 90% உதவித்தொகை வழங்குவதால், ஒவ்வொரு உறுப்பினரும் ஆண்டுக்கு ரிம23.30 மட்டுமே செலுத்துகிறார்கள். இத்திட்டம் தேவைப்படுபவர்களுக்கு உதவும் வகையில் அமைகிறது,” என்று ஸ்ரீ சங்கர் விவரித்தார்.

ஸ்ரீ சங்கர் அனைத்து பிறை எம்.பி.கே.கே உறுப்பினர்களுக்கும் ரிம349.50 இன் மொத்த கட்டணத்தையும் செலுத்தினார். இந்தக் காப்புறுதி இந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த உறுப்பினர்களுக்குப் பணி நேரத்தில் அசம்பாவிதம் நிகழ்ந்தால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வயது முதிர்ந்தவராக இருந்தால், பயனாளி இறக்கும் வரை மாதந்தோறும் ரிம1,395 பெறுவார். இருப்பினும், பயனாளி மைனராக இருந்தால் (18 வயதுக்குட்பட்டவர்), பயனாளி 18 வயதை அடையும் வரை மாதந்தோறும் ரிம1,395 பெறுவார்.

பிறை எம்.பி.கே.கே உறுப்பினராக இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றும் பூஜா சமரசி, 45 என்பவர் சோக்சோவின் பாதுகாப்புத் திட்டத்தில் பயனடைபவர்களின் பட்டியலில் ஒருவராக திகழ்வதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்.

“இந்த முயற்சிக்கு எங்கள் தலைவர் ஸ்ரீ சங்கருக்கு நன்றி; இது எம்.பி.கே.கே உறுப்பினருக்குப் பெரிதும் உதவும். இதைச் செய்வதன் மூலம், எதிர்காலத்தில் எனக்கு வேலையில் விபத்து ஏற்பட்டால், எனது குடும்பத்தின் சுமையைக் குறைக்க முடியும்,” என்று முத்துச் செய்திகளுக்கு பேட்டியளித்தபோது பூஜா இவ்வாறு கூறினார்.

பிறை எம்.பி.கே.கே செயலாளரான கே.ரகுநாதன்,74 இந்தக் காப்புறுதி வழங்கப்படுவதன் முக்கியத்துவத்தை நன்கு அறிவதாகவும் கூறினார்.

whatsapp image 2024 05 13 at 18.44.14
கே.ரகுநாதன்

“எம்.பி.கே.கே பிறையுடன் 20 ஆண்டு காலம் பணியாற்றி வருவதாகவும், இத்திட்டம் (சோக்ஸோ) செயல்படுத்தப்படும் என்று அறிவதில் மன நிறைவு கொள்கிறேன். நாம் எங்கு வேலைச் செய்தாலும் பாதுகாப்பு என்பது முதலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்,” என்றார்.

“மழை, வெள்ளம், மரம் சாய்தல் போன்ற இயற்கை பேரிடர் சம்பவங்கள் ஏற்படும் போது நேரம் காலமின்றி முதலில் நாங்கள் சென்று உதவிக்கரம் நீட்டுவோம். அந்நேரத்தில் ஏதெஎனும் நிகழும் சூழலில் இது எங்களுக்கு பேருதவியாக அமையும்”, என்றார்.

ஒட்டுமொத்தமாக, பினாங்கில் பிறை எம்.பி.கே.கே உறுப்பினர்களுக்கான Socso SPS சேவையின் தொடக்கமானது அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இது அவர்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன் சமூகச் சேவை செய்வதை உறுதிசெய்கிறது.