பிறை – அண்மையில், பிறை சட்டமன்ற சேவை மைய ஏற்பாட்டில் சாய் லெங் பார்க் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இரத்த தானம் முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி மலேசியா செத் ஜான் ஆம்புலன்ஸ், வட இரத்த தானம் கழகம், மடானி மக்கள், பிறை மாவட்ட சுகாதார அலுவலகம் மற்றும் பிறை தொகுதி எம்.பி.கே.கே. (கிராம சமூக மேலாண்மை கவுன்சில்கள்) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.
இரத்த தான நடவடிக்கை தவிர, இந்நிகழ்ச்சியில் இலவச இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை பரிசோதனைகள் உட்பட இலவச சுகாதார பரிசோதனைகள் இடம்பெற்றன. மேலும், வர்ணம் தீட்டும் போட்டியும், பொன்சாய் மர கண்காட்சியும் நடைபெற்றது.
பிறை தொகுதி சேவை மைய மேலாளர் மோகன் இராமசாமி, இத்தொகுதியில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இரத்த தான முகாம் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.
“இந்த முன்முயற்சி திட்டமானது உள்ளூர் மற்றும் அருகிலுள்ள குடியிருப்பாளர்களை இரத்த தானம் செய்ய ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“இரத்த தானம் செய்வது பல உயிர்களைக் காப்பாற்றும் என்பதால், அடிக்கடி இத்திட்டத்தை வழிநடத்த ஊக்குவிக்கிறோம்.
“இத்திட்டத்தின் மூலம், இரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
“இத்தொகுதியில், இரத்த தானம் முகாமை ஏற்று நடத்தும் ஒவ்வொரு முறையும் நாங்கள் வழக்கமாக 120 பை இரத்தத்தைச் சேகரிப்போம். இதுவரை, எங்களுக்கு கிடைத்த வரவேற்பு சிறப்பாக உள்ளதால் நாங்கள் தொடர்ந்து நடத்த இணக்க கொண்டுள்ளோம்,” என்று மோகன் முத்துச் செய்திகள் நாழிதழ் நிருபரிடம் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சாய் லெங் பார்க் எம்.பி.கே.கே தலைவர் டத்தோ எங் உய் லாய் மற்றும் தாமான் இண்ராவாசே எம்.பி.கே.கே செயலாளர் ஜெரி லியோங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.