வேல்விஷ் கோன்செப் (Wellwish Concept Sdn.Bhd) தனியார் நிறுவனம் 2011-ஆம் ஆண்டு ரிம800,000 மதிக்கத்தக்க பிறை சந்தை (மார்க்கெட்) பழைய உரிமையாளரிடம் வாங்கியது. மேம்பாட்டுத் திட்டத்திற்காக அவ்விடத்தில் வியாபாரம் செய்து வந்த மூவினத்தைச் சேர்ந்த வியாபாரிகளும் அவ்விடத்தைக் காலிச்செய்ய பரிந்துரைக்கப்பட்டனர். எனவே, இப்பிரச்சனையைக் களைய அந்த 23 வியாபாரிகளும் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்களை நேரில் கண்டு முறையிட்டனர். மாநில துணை முதல்வரும் இப்பிரச்சனையைக் குறுகிய காலத்தில் தீர்த்து வைத்துப் பணமும், மாற்று இடம் பெற்று தருவதாக கூறியிருந்தார்.
வேல்விஷ் கோன்செப் நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக வியாபாரிகள் இடத்தைக் காலி செய்யக்கோரி நடந்த பேச்சுவார்த்தை வழக்கு நீதிமன்றம் வரை சென்ற வேளையில், துணை முதல்வர் அவர்கள் பாமேலா விஜயராணி வழக்கறிஞர் நிறுவனத்தையும், சட்ட ஆலோசகர் ஷம்சீர் சிங்கையும் வியாபாரிகள் சார்பில் நியமித்து வியாபாரிகளுக்கு தகுந்த இழப்பீடு தரக்கோரி போராடியது இறுதியில் வெற்றியை தழுவியது. பிறை சந்தையில் வியாபாரம் செய்த 23 வியாபாரிகளுக்கும் 12 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை இழப்பீடு இரண்டு தவணையாக வழங்கப்படவுள்ளன.
முதல் தவணைக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு பிறை சட்டமன்ற சேவை மையத்தில் இனிதே நடைபெற்றது. பிறை சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்களின் பொற்கரத்தால் அனைவருக்கும் முதல் தவணைக்கான இழப்பீட்டுத் தொகைக்கானக் காசோலை எடுத்து வழங்கப்பட்டன. அதே வேளையில், வியாபாரிகள் அனைவருக்கும் செபெராங் பிறை நகராண்மைக் கழக வியாபாரக் கடைகள் பெற்றுதரப்படும் என செய்தியாளர் சந்திப்பில் கூறியது வியாபாரிகளை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது. பிறை நகரம் பழமையானது என்பதால் குறிப்பிட்ட ஒரு பகுதியை பினாங்கு மாநில அரசு புராதன பாரம்பரிய இடமாக அறிவிக்க ஏற்பாடுகள் செய்து வருவதை அவர் மேலும் குறிப்பிட்டார்.
இழப்பீடு பெற்றவர்களில் புருஷோத்தமன், பத்துமலை, திருநாவுக்கரசு, காச்சாபதி, பெரியம்மா, மாலிகர் ஆகியோர் தலா ரிம 12,000 பெற்றுள்ளனர். மேலும் நான்கு பேர் ரிம17,000-ஐயும் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் செபெராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களான திரு.சத்தீஸ் முனியாண்டி மற்றும் திரு. டேவிட் மார்ஷல் ஆகியோர் கலந்து கொண்டனர்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);