மலேசிய நாட்டின் முதன்மை பெருநாட்களில் ஒன்றான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் அண்மையில் அனைத்து மலேசிய முஸ்லிம் அன்பர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பிறை வாழ் முஸ்லிம் மக்களை அங்கீகரிக்கும் வகையில் அத்தொகுதியின் ஏற்பாட்டில் கடந்த ஆகஸ்டு 15-ஆம் திகதி பட்டர்வோர்த் ஜயண்ட் பேரங்காடி வளாகத்தில் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு மிக விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிறை சட்டமன்ற உறுப்பினரும் பினாங்கு இரண்டாம் துணை முதல்வருமான ப.இராமசாமி அவர்கள் தம் துணைவியார் திருமதி கலையரசியுடன் கலந்து சிறப்பித்தார். பிறை சமூக மற்றும் முன்னேற்ற கழகத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் மக்கள் திரளாக வந்திருந்தனர். அதற்கேற்றவாறு, அங்கு அகன்ற கூடாரமும் அமைக்கப்பட்டிருந்ததால் மக்கள் கூடாரத்தினுள் அமர்ந்து குடும்பத்தாருடன் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த பல்வகை உணவு பதார்த்தங்களை உண்டு மகிழ்ந்தனர்.
எட்டு ஆண்டு காலம் ஆட்சி புரிந்து வரும் பினாங்கு மாநில அரசு மக்கள் நலனை முன்னிறுத்தியே பல ஆக்ககரமான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மக்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து அதற்கு உடனடித் தீர்வு காண்பதே எங்கள் தலையாய கடமை என்று சிறப்புரையாற்றிய பினாங்கு துணை முதல்வர் கூறினார். தற்போது போக்குவரத்து நெரிசலை அதிகமாக எதிர்நோக்கும் கம்போங் மானிஸ் சுற்று வட்டார பிரதான சாலைகள் பிரச்சனையைக் களைய செபராங் பிறை நகராண்மைக் கழகத்திடம் கலந்து ஆலோசிப்பதாகக் கூறினார். அதோடு, தாமான் செனாங்கின் வட்டார வெள்ள நிவாரணப் பிரச்சனைக்கும் விரைவில் தீர்வுக்காணப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், பிறை வட்டாரத்தில் பசுமையை நிலைநாட்ட ஆங்காங்கே மரக்கன்றுகள் நடப்படுகிறது. எனவே, பொதுமக்கள் மரங்களை வெட்ட வேண்டாம் என வலியுறுத்தினார்