பிறை தொகுதியில் அதிகமான போதைப்பொருள் விழிப்புணர்வு பட்டறை நடத்த இலக்கு

Admin

பிறை – அண்மையில், பிறை சமூக நிர்வாக மேம்பாட்டுக் கழகம்(MPKK) ஏற்பாட்டில் பிறை மகளிர் மேம்பாட்டுக் கழகம்(JPWK), பினாங்கு மாநில தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனம் (AADK) இணை ஆதரவில் மாணவர்களுக்கான ஆளுமைத் திட்டத்தின் கீழ் ‘போதைப்பொருள் ஒழிப்போம்’ எனும் பட்டறை நடைபெற்றது.

இந்தப் பட்டறை பிறை தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அதன் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டப் பள்ளி மாணவர்களுடன் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

“தற்போது போதைப்பொருள் பழக்கம் பள்ளி மாணவர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. மாணவர்கள் போதைப்பொருள் உட்கொள்வதனால் ஏற்படும் தீமையை உணராமலே அதற்கு அடிமையாகின்றனர். போதைப்பொருள் அவர்களின் எதிர்காலத்தைச் சீர்குலைக்கிறது,” என பிறை MPKK தலைவர் ஸ்ரீ சங்கர் தமது வரவேற்புரையில் இவ்வாறு கூறினார்.

‘இன்றைய மாணவர்கள் நாளையத் தலைவர்கள்’ என்ற அடிப்படையில் அவர்கள் தீயப் பழகங்களில் ஈடுப்படாமல் இருப்பதற்கு இந்த விழிப்புணர்வு பட்டறை நடத்துவது அவசியம், என்றார்.

பிறை தொகுதி MPKK கீழ் இருக்கும் பிற இரண்டு சீன மற்றும் தேசிய வகை ஆரம்பப்பள்ளிகளிலும் இந்தப் போதைப்பொருள் ஒழிப்புப் பட்டறை கூடிய விரைவில் நடத்தத் திட்டமிடுவதாக ஸ்ரீ சங்கர் தெரித்தார்.

மத்திய செபராங் பிறை போதைப்பொருள் தடுப்புக் குழுவின்
உறுப்பினர் திருமதி உஷா பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பட்டறையைச் சிறப்பாக வழிநடத்தினார்.

மேலும், போதைப்பொருள் உட்கொள்வதால் ஏற்படும் மனநிலை பாதிப்பு வன்முறைக்குத் தூண்டும்; போதையோடு வாகனம் ஓட்டுதல் அல்லது இயந்திரங்களை இயக்குதல் விபத்துக்களையும் காயத்தையும் ஏற்படுத்தும்; உடல் ரீதியில் காயத்தையும் மரணத்தையும் ஏற்படுத்தக் கூடும் என மாணவர்களுக்கு நன்கு புரியும் வகையில் சிறப்பாக இப்பட்டறையை வழிநடத்தினார். இது போதைப்பொருள் உட்கொள்வர்கள் மட்டுமின்றி குடும்பத்தார் மற்றும் சமூக ரீதியில் பல பாதிப்புகள் ஏற்படுத்தக்கூடும் என உஷா விளக்கமளித்தார்.

இந்தப் பட்டறையில் போதைப்பொருள் மட்டுமின்றி புகைப் பிடிக்கும் பழக்கத்தினாலும் ஏற்படும் தீமைகள் பற்றி மிக தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது. பொதுவாகவே, போதைப்பொருள் கடத்தல் மற்றும் உட்கொள்ளும் நபர்கள் அதிகமான குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பது மறுப்பதற்கில்லை.

மேலும், இந்நிகழ்ச்சியில் போதைப்பொருள் கண்காட்சியும் இடம்பெற்றது. இக்கண்காட்சியில் போதைப்பொருள், அது குறித்த பிரச்சூரங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் திருமதி வாசுகி தேவி, மத்திய செபராங் பிறை போதைப்பொருள் தடுப்புக் குழுவின் உறுப்பினர்களான உஷா தேவி, நூர் அரிவ் பட்சிலின், அலினா பஹாருடின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தப் பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்குப் பங்கேற்பு நற்சான்றிதழும் வழங்கப்பட்டது.