பிறை – இந்த ஆண்டின் தேசிய மாத கொண்டாட்டத்தை முன்னிட்டு பிறை சட்டமன்ற தொகுதி அலுவலக ஏற்பாட்டில் சுமார் 2,000 தேசிய கொடிகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.
பினாங்கு மாநிலத்தில் சிறுபான்மையினர் மட்டுமே தேசிய கொடியை பறக்கவிடுவதோடு தங்கள் வாகனங்களிலும் பொருத்தியுள்ளனர் என இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமியின் பிரதிநிதியாக வருகையளித்த செபராங் பிறை மாநகர் கழக உறுப்பினர் டேவிட் மார்ஷல் இவ்வாறு கூறினார்.
“தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு இன்னும் நான்கு நாட்களே எஞ்சிய நிலையில் பினாங்கு மாநில சுற்று வட்டாரத்தில் பொது மக்கள் வியாபார வளாகங்கள் மற்றும் வாகனங்களில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைவாகவே தேசிய கொடி பறக்கவிட்டுள்ளனர் என்பதை கண் கூடாக காண முடிகிறது.
“இந்த ஆண்டு அதிகமானோர் தேசிய கொடியைப் பறக்கவிடாததற்கு பல காரணங்கள் இருக்கலாம், குறிப்பாக கோவிட்-19 தாக்கத்தால் பொருளாதார நெருக்கடி மற்றும் தேசிய கொடி அனைத்து கடைகளிலும் விற்காததும் இதில் அடங்கும்,” என டேவிட் விளக்கமளித்தார்.
“எனவே, பிறை தொகுதி பொது மக்களுக்கு தேசிய கொடியை இலவசமாக வழங்கும் முயற்சியை மேற்கொண்டோம். இதன் மூலம் அரசியல் வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் பொது மக்களிடையே தேசப்பற்று மற்றும் சுதந்திர உணர்வை மேலோங்கச் செய்ய வழிவகுக்கும்,” என சாய் லெங் பார்க் பொதுச் சந்தையில் பொது மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தேசியக் கொடி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில் (எம்.பி.எஸ்.பி) மாநகர் கழக உறுப்பினர் ஜேசன் ராஜ் மற்றும் சாய் லெங் பார்க் எம்.பி.கே.கே உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
“இந்நாட்டு குடிமக்கள் குறிப்பாக பினாங்கு வாழ் மக்கள் தேசியக் கொடியை பொருத்தும் வழிமுறைகளை நன்கு அறிந்திருப்பது அவசியம். ஏனெனில், அண்மையில் சமூக ஊடகங்களில் தேசியக் கொடியைத் தவறுதலாக பொருத்தும் படங்கள் பதிவாகி வருகின்றன. இச்செயல் இந்நாட்டிற்கும் குடிமக்களுக்கும் துரோகம் விளைவிக்கும் செயலாக கருதப்படுகிறது, என அறிவுறுத்தினார்.
“குடிமக்கள் என்ற முறையில், தேசியக் கொடி பொருத்தும் வழிமுறைகள் அறிய வேண்டும். ஏனெனில், தேசிய கொடி ஒரு நாட்டின்
இறையாண்மையின் அடையாளமாக திகழ்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
தற்போது, கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக பிறை தொகுதி கம்போங் நிர்வாக செயல்முறை கழகத்தை சேர்ந்த 12 உறுப்பினர்களால்
தாமான் சாய் லெங் பொதுச் சந்தை மிகுந்த பாதுகாப்புடன் கண்காணிக்கப்படுகிறது.
“கடந்த ஜூலை மாதம் பினாங்கில் புதிய கோவிட்-19 வழக்குகள் பதிவுப்பெற்றவுடன் இந்த பாதுகாப்பு நடவடிக்கை துரித படுத்தப்பட்டது.
“நான் ஜேசன் ராஜ் உடன் இணைந்து ஏறக்குறைய ரிம10,000 நிதி ஒதுக்கீடு வழங்கி இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிதியில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் (எஸ். ஓ.பி) பின்பற்ற பயன்படுத்தப்படும் உடல் உஷ்ண பரிதோசனை கருவி மற்றும் பணியில் ஈடுப்படும் ஒவ்வொரு எம்.பி.கே.கே உறுப்பினர்களுக்கும் தினசரி ரிம30 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது, என்றார்.