ஜார்ச்டவுன் – பிறை மாநில சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ, பிறை மாநில சட்டமன்றத் தொகுதியில் எந்தவொரு மாணவர்களும் நிதிப் பிரச்சனைகளால் உயர்கல்வி கூடங்களில் படிப்பைத் தொடர்வதை நிறுத்துவதை உறுதி செய்ய விருப்பம் பூண்டுள்ளார்.
வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஆட்சிக்குழு உறுப்பினரான சுந்தராஜு , ஒருமுறை ரொக்கமாக வழங்கப்படும் ரிம500-க்கான நிதியுதவி மாணவர்கள் வெற்றிகரமாக மேற்படிப்பை தொடர உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“வழங்கப்படும் நிதியுதவி அதிகமாக இல்லாவிட்டாலும், பிறை தொகுதியில் மேற்கல்வி தொடரும் மாணவர்களுக்கு வழங்கும் இந்த நிதியுதவி சுமையைக் குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், சிறந்த முறையில் தொடர்ந்து படிக்க ஊக்கமாகவும் திகழும் என்று நம்புகிறேன்” என்று கொம்தாரில் நடைபெற்ற நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் சுந்தராஜு குறிப்பிட்டார்.
சுந்தராஜுவின் கூற்றுப்படி, அவரது தரப்பினரி இணையம் வாயிலாக மொத்தம் 54 விண்ணப்பங்களைப் பெற்றனர் என்றார். மேலும், தகுதி அடிப்படையில் திரையிடல் செயல்முறைக்குப் பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட 50 மாணவர்கள் இந்த நிதியுதவியைப் பெற்றனர் என்று விரிவுப்படுத்தினார்.
இன்று, தகுதியான 50 மாணவர்களுக்கு மொத்தம் ரிம25,000 வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, இதுவரை 97 பெறுநர்களுக்கு ரிம48,500 நிதியுதவியை பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ சுந்தராஜுவிடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“இதனிடையே, குறிப்பாக பிறை தொகுதியில் உள்ள மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்குவதற்காக ரிம49,500 முன்னதாக ஒதுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், கல்வி நிதியுதவியை ஒப்படைத்த சுந்தராஜுக்கு அனைத்து மாணவர்களும், பெற்றோர்களும் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
இதேபோல், மலேசியா பெர்சில் பல்கலைகழகத்தில் (UniMap) மெகாட்ரானிக் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர், ரிடீஹிமான், 19, பிறை கல்வி நிதியுதவியை பெற்றதற்கு உற்சாகமடைந்தார்.
“இந்த நிதியுதவி குடும்பத்தின் நிதிச் சுமையைக் குறைக்கும் அதே வேளையில் கொஞ்சம் செலவுக்காக பணத்தைப் பெறவும் முடியும் என்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கொம்தாரில் நிகழ்ச்சியில் சந்தித்தபோது அவர் கூறினார்.
நுர் ஷாமிமி, மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மலாக்காவில் (UTeM) கணினி பாதுகாப்பு துறையில் தனது படிப்பைத் தொடரவிருக்கும் மாணவி, பெறப்பட்ட நிதியுதவி குறித்து தனது உணர்ச்சியை வெளிப்படுத்தினார்.
“இந்த நிதியுதவிக்கு டத்தோஶ்ரீ சுந்தராஜூக்கு நன்றி, பின்னர் இது எனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்” என்று பிறைவாசியான அவர் கூறினார்.
மற்றொரு பெறுநரான மெலிசா தான் வேய், 18, பிறை மாணவர்களின் நிதியுதவிப் பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது மகிழ்ச்சியடைந்தார்.
“நான் இங்குள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் எனது படிப்பைத் தொடங்கவுள்ளேன். இந்த நிதியுதவி உண்மையில் நிதிச் சுமையைக் குறைக்க உதவுகிறது,” என்று அவர் தனது தாயுடன் வருகையளித்தபோது கூறினார்.