இந்துக்களின் முக்கிய பண்டிகையில் தீபாவளியும் சிறப்பிடம் வகுக்கிறது. இதனை மெருகூட்டும் வகையில் பினாங்கு மாநிலத்தில் ஆங்காங்கே தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நடைபெற்றது. இவ்விருந்துபசரிப்பு பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமியின் ஏற்பாட்டில் தாமான் சுப்ரீமில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தமது துணைவியார் திருமதி.கலையரசியுடன் கலந்து சிறப்பித்தனர்.
அதன் பிறகு, மாநில முதல்வர் மற்றும் இரண்டாம் துணை முதல்வர் பொற்கரத்தால் குத்து விளக்கு ஏற்றி பிரபல ஆஸ்ட்ரோ புகழ் கெலக்ஸி நடனமணிகளின் முகப்பு ஆடலுடன் நிகழ்வு இனிதே தொடங்கியது. ஆடல் பாடல் என இயல் இசையுடன் திறந்த இல்ல உபசரிப்பு சிறப்பாக இருந்தது. இதனுடன் “வைசுவன் கேளிக்கை” கலைநிகழ்ச்சியும் நம் நாட்டின் திறன்மிக்க கலைஞர்களின் படைப்புகளும் நிகழ்விற்கு சிறப்பு சேர்த்தன. அந்நிகழ்விற்கு பொதுமக்கள் புற்றீசல் போல் திரண்டனர். சுமார் 2000 பேருக்கு ஶ்ரீ ஆனந்த பவன் உணவகத்தின் உணவு பண்டங்கள் வழங்கப்பட்டன. இதனிடையே, சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த தீபாவளி அன்பளிப்பு பணத்தை 250 பேருக்கு பிறை சட்டமன்ற உறுப்பினர் ப.இராமசாமியும் அவர்தம் துணைவியாரும் இணைந்து வழங்கினர்.
இதனை தொடர்ந்து உரையாடுகையில் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள் விரைவில் பிறை தொகுதியை ஒரு பசுமை பூங்காவாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். அதோடு, இங்குள்ள அடுக்குமாடியின் பல பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வுக் கண்டு வருவதையும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, டத்தோ கெராமாட் தொகுதியின் ஏற்பாட்டில் தாமான் ஜாஜாரில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெக்டிப் சிங் டியோ, ஆட்சிக்குழு உறுப்பினர்களான பீ புன் போ, லாவ் ஹெங் கியாங், கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹெங் மற்றும் பாயா தெருபோங் சட்டமன்ற உறுப்பினர் இயோ சூன் இன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். சுமார் 600 சுற்று வட்டார பொதுமக்களுக்கு உணவோம்பல் வழங்கப்பட்டதோடு வயோதியர்களுக்கு பரிசுக்கூடையும் வழங்கப்பட்டன. அதோடு, பேரிஸ் நகரில் கொடூரமாக கொலை செய்து சுட்டுவீழ்த்தப்பட்ட பொதுமக்களுக்காக ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது பாராட்டக்குரியதாகும். நிகழ்வில் சிறப்புரை வழங்கிய திரு. ஜெக்டிப் அவர்கள் அனைத்து இந்தியர்களுக்கும் தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டார்.