பிறை வட்டாரத்தைப் பசுமைமிகு சுற்றுச்சூழல் இடமாக மேம்படுத்த இலக்கு

Admin
ponnudurai

செபராங் ஜெயா – தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்குதல் எனும் பினாங்கு2030 இலக்குக்கு ஏற்ப ‘மக்களை மையப்படுத்துதல்’ என்ற அணுகுமுறையுடன் ஒரு நிலையான மற்றும் விவேகமான நகரமாக செபராங் பிறையை மேம்படுத்த வேண்டும்.

பிறை வட்டாரத்தை பசுமைமிகு சுற்றுச்சூழலுடன் சிறந்த வாழ்விடமாக மாற்றியமைக்கும் நோக்கத்துடன் செபராங் பிறை மாநகர் கழக உறுப்பினராக சேவையாற்றி வரும் பொன்னுதுரை அந்தோணி முத்துச் செய்திகள் நாளிதழ் மேற்கொண்ட நேர்காணலின் போது இதனைத் தெரிவித்தார்.

பிறை, கம்போங் மானிஸில் பிறந்து வளர்ந்த பொன்னுதுரை அந்த சுற்று வட்டாரத்தை நன்கு அறிந்தவர். எனவே, பிறை வட்டாரத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் சேவையாற்ற கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

விரைவில் மேற்கொள்ளவிருக்கும் கம்போங் மானிஸ் வீடமைப்புத் திட்டம் குறித்து கருத்துரைத்த அவர், தற்போது இத்திட்டம் மேம்பாட்டாளரைத் தீர்மானிக்கும் பிரிவில் உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்த வீடமைப்புத் திட்டம் தொடங்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் கவுன்சிலராக பதவியேற்ற பின்னர், தாமான் பிறை உத்தாமா, கம்போங் மெய்ன் ரோட், சாய் லெங் பார்க் போன்ற இடங்களில் கால்வாய்களைச் சுத்தம் செய்து பராமரிக்கப்படுகிறது. இதன் மூலம், அப்பகுதியில் ஏற்படும் வெள்ள பிரச்சனையில் இருந்து தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.

இதனிடையே, பிறை சட்டமன்ற சேவை மையத்துடன் இணைந்து ஜாலான் பாரு, ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயம், பெர்ல் வியூ தங்கும்விடுதி, கம்போங் மெய்ன் ரோட் அருகாமையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளதையும் பொன்னுதுரை குறிப்பிட்டார்.

இந்த வட்டாரங்களில் வாகன நெரிசல் அதிகம் நிகழும்போது பாதசாரிகளின் பாதுகாப்பை மையப்படுத்தி இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது, என்றார். பிறை வட்டாரத்தில் சுற்றுலா தலமாக திகழும் மயில் பூங்காவினை இன்னும் மேம்படுத்த இணக்கம் பூண்டுள்ளார்.

கூடிய விரைவில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மறுசுழற்சி பொருட்களால் உருவாக்கப்பட்டப் பானையை மயில் பூங்காவில் வைக்க முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

ponnudurai 2

பிறை வட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு அரசாங்கம் சார்ந்த திட்டங்களை அறிமுகப்படுத்தவும் அதனை கையாளும் முறைகளை பற்றியும் கற்றுக்கொள்ள அவ்வாட்டார எம்.பி.கே.கே உடன் இணைந்து பட்டறை நடத்த இணக்கம் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.