பிறை ஸ்ரீ செல்வ விநாயகர் பரிபாலன தேவஸ்தானத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட சர்ச்சை/உட்பூசல் காரணமாக கடந்த 24 அக்டோபர் 2015-ஆம் நாள் அன்று பினாங்கு இந்து அறப்பணி வாரியம் நிர்வாக உரிமத்தை கைப்பற்றியது. இந்த ஆலயத்தின் பதிவு ரத்தாகி இருப்பதாலும் ஆலய நிர்வாகத்தில் மோசடி ஏற்பட்டிருப்பதாலும் பொதுமக்கள் கொடுத்த புகாரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பினாங்கு இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரிய தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார்.
ஆலயத்தின் நிர்வாகப் பொறுப்பை எடுத்து கொள்ளும் பொருட்டு, ஆலயத்தின் முன்னாள் மற்றும் நடப்பு நிர்வாகத்தினர் மற்றும் ஆலய வளர்ச்சியின் பொறுப்பாளர்கள் ஆகியோருடன் பல மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்திய துணை முதல்வர் இந்த விவகாரத்தில் அனைவரது ஒருமித்த ஆதரவு அவசியமென்றும் இந்து அறப்பணி வாரியம் இந்துகளுக்குச் சிறந்த சேவையை வழங்கும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த ஆலய நிர்வாகத்தை முறைப்படி இந்து அறப்பணி வாரியத்திடம் ஒப்படைப்பதற்கு முரண்பாடன கருத்துகளைக் கொண்டிருக்கும் சில தரப்பினரால் சிக்கல் எழுந்திருப்பதால், இந்த விவகாரத்தில் ஒருமித்த உணர்வுடன் நல்லிணக்கம் கண்டு இன்னும் ஒரு மாத காலத்திற்குள் சுமூகமான முடிவுக்கு வருமாறு கோரிக்கை விடுத்தார் பேராசிரியர். இதனிடையே, இந்து அறப்பணி வாரியம் தூண்டுகோலாக இருந்து இவ்வாலயத்தின் வளர்ச்சிக்கு வித்திடுவதோடு, ரத்தான பதிவை புதுப்பிக்க உதவி புரிவதாக பொதுமக்களிடம் தெளிவுப்படுத்தினார். அதோடு, இந்து அறப்பணி வாரியம் இந்தியர்களின் கல்வி, பொருளாதாரம், சிறுதொழில் வாய்ப்பு என பல கோணங்களில் பினாங்கு வாழ் மக்களுக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் அ.தனசேகரன், இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குநர் திரு.இராமசந்திரன் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ஆதரவு நல்கினர்.} else {