ஜார்ச்டவுன் – மாநில அரசு, பினாங்கு இளைஞர் மேம்பாட்டுக் கழகம் (பி.ஒய்.டி.சி) மூலம், இம்மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு தொடர்ந்து கோவிட் -19 தொற்றுநோய் தாக்கத்தை கருத்தில் கொண்டு வேலை வாய்ப்புகளை தேட இணக்கம் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரம், தற்போது மற்றொரு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ 3.0) அமலாக்கத்தில் இன்னும் பாதிக்கக்கூடும் என மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ குறிப்பிட்டார்.
“எனவே இளைஞர்களின் சுமையை குறைக்க குறிப்பாக வருமானம் நெருக்கடியை எதிர்கொள்ளும் தரப்பினருக்கு உதவ பி.ஒய்.டி.சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
“இம்மாநில இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க பினாங்கில் உள்ள ஐந்து கற்றல் நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
“இந்த ஒருங்கிணைப்பில் பினாங்கு திறன் மேம்பாட்டு மையம் (பி.எஸ்.டி.சி), யு.ஓ.டபிள்யூ மலேசியா கே.டி.யு பினாங்கு பல்கலைக்கழக கல்லூரி, துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக கல்லூரி, ஹான் சியாங் பல்கலைக்கழக தொடர்பு துறை கல்லூரி மற்றும் செகி கல்லூரி ஆகியவை இதில் அடங்கும்.
“அதுமட்டுமின்றி, இளைஞர்களின் கல்வி மேம்பாடு குறித்து மிகவும் அக்கறை கொண்டுள்ளோம். எனவே, எதிர்காலத்தில் மற்ற கற்றல் நிறுவனங்களுடனும் ஒருங்கிணைத்து செயல்பட இணக்கம் கொண்டுள்ளதாக,” கூறினார்.
“இளைஞர்கள் இம்மாநிலத்தின் எதிர்கால ‘சொத்தாக’ கருதப்படுகிறார்கள். அவர்கள் மேம்பாடு காண உதவி புரிய கடமைப்பட்டுள்ளோம்.
‘எதிர்காலத்திற்கான இளைஞர்கள்’ எனும் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு, தொழில்துறை நிறுவனங்கள், கற்றல் மையங்கள், அரசு சாரா நிறுவனங்கள் (தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்) மற்றும் தனியார் துறை ஆகியோருடன் வலுவான ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
“இன்றைய நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக பி.ஒய்.டி.சி-க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
“இம்மாநில இளைஞர்களின் மேம்பாட்டுக்காக கைகோர்த்து செயல்படுவோம்,” என்று அவர் தேசிய இளைஞர் தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒரு மணி நேர மெய்நிகர் அமர்வின் போது தனது உரையில் இவ்வாறு கூறினார்.
பி.ஒய்.டி.சி பொது மேலாளர் டாக்டர் க்வீ சாய் லிங் கருத்துரைக்கையில், இளைஞர்கள் தேசத்தின் தூண் மற்றும் அதன் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக விளங்குவர் என்று கூறினார்.
“இளைஞர்களின் மேம்பாட்டுக்கு ஒன்றிணைந்து செயல்படுவோம்,” என்றார்.
மெய்நிகர் அமர்வின் போது இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் அமர்வில் பங்கேற்ற இளைஞர்களின் பிரதிநிதிகள், இயங்கலை கற்றல் மற்றும் மனநல பிரச்சினைகள் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
தற்போதைய புதிய இயல்பில் இயங்கலை கல்வி கற்றல் அனைவருக்கும் அவசியமாகும்.
“இன்னும் பல பெற்றோர்களும் அவர்களின் பிள்ளைகளும் இந்த புதிய இயல்பில் கல்வி கற்க இணக்கம் கொள்ளவில்லை. ஏனெனில், அவர்கள் நேரடி கல்வி கற்பித்தல் முறையை அதிகம் விரும்புகிறார்கள்.
“இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, இயங்கலை கற்றல் இன்னும் தொடர வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இந்த அமர்வில் பி.ஒய்.டி.சி துணை பொது மேலாளர் இங் ஓய் துங்; பி.ஒய்.டி.சி இயக்குனர் லீ வீ சீங், பெங்கலான் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் கூய் மற்றும் பல இளைஞர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.