ஜார்ச்டவுன்- ஜனவரி,13 தொடங்கி 23 வரை நாட்டின் ஆறு மாநிலங்களான பினாங்கு, ஜோகூர், சிலாங்கூர், கோலாலம்பூர், மலாக்கா, சபா, புத்ராஜெயா மற்றும் லபுவான் ஆகிய மாநிலங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அறிவிக்கப்பட்டது.
அதேவேளையில் கெடா, பேராக், நெகிரி செம்பிலான், திரங்கானு, பஹாங் மற்றும் கிளந்தான் ஆகிய பிற ஆறு மாநிலங்களில் நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறபிக்கப்பட்டது. மேலும், மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை சரவாக் மற்றும் பெர்லிஸ் மாநிலங்களில் அறிவிக்கப்பட்டது.
இன்று(13/1/2021) இரவு மணி 12.01 தொடங்கி பினாங்கில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 2.0 அமலாக்கம் காணவிருப்பதால் முத்துச்செய்திகள் நாளிதழ் நிருபர்கள் பொது மக்கள் மற்றும் வர்த்தகர்களின் கருத்துகளைப் பதிவுச்செய்தனர்.
லிட்டல் இந்தியா வளாகத்தில் பி.கே.பி 2.0 அறிவிப்பைத் தொடர்ந்து பொது மக்கள் பரபரப்பான முறையில் பொருட்கள் வாங்குவதைக் கண்கூடாகக் காண முடிந்தது.
இரண்டாவது முறையாக அறிவிக்கப்படும் இந்த பி.கே.பி 2.0 அமலாக்கம் அனைத்து வர்த்தகர்களுக்கும் குறிப்பாக நகைக்கடை வியாபாரிகளுக்கும் பாதிப்பை விளைவிப்பதாக பினாங்கு, லிட்டல் இந்தியா ஜுவல்லரி நகைக்கடை மேலாளர் முகமது அஷாரி,56 கூறினார். இரண்டு வார கடை அடைப்பினால் வியாபாரத்தில் நஷ்ட்டத்தை விளைவிப்பதாகவும் சக ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்குவதிலும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் கூறினார். கோவிட்-19 தொற்று நோய் பரவலை தடுக்கும் முயற்சியாக பி.கே.பி அமலாக்கம் விளங்கினாலும் இது வியாபாரத்துறைக்கு பெரும் நஷ்ட்டத்தை விளைவிப்பதோடு பொருளாதார வீழ்ச்சிக்கும் வித்துடுகிறது, என கூறினார்.
வருகின்ற வியாழக்கிழமை (14/1/2021) அன்று பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு பொது மக்கள் மிகுந்த பரபரப்புடன் பொங்கல் விழா கொண்டாட்டத்திற்கானப் பொருட்களை வாங்குவதை லிட்டல் இந்தியா வளாகத்தில் காண முடிந்தது. கரும்பு, மஞ்சள் கொம்பு விற்பனையில் ஈடுப்பட்ட சிறு தொழில் வியாபாரி மோ.அன்புக்கரசன், இந்த பி.கே.பி 2.0 அமலாக்கம் தனது விழாக்கால விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறினார்.
‘நம்ப வீட்டு சாப்பாடு’ எனும் உணவகம் புதிதாக திறப்பு விழாக் கண்ட ஒரு மாதத்திலே பி.கே.பி 2.0 அமலாக்கம் பெரும் பாதிப்புக்கு உட்படுத்துவதாக உணவக உரிமையாளர் தனராஜ்,31 கூறினார். இந்த பி.கே.பி அமலாக்கத்தின் போது உணவகங்கள் திறக்க அனுமதி வழங்கியபோதிலும், இது பொது மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதன் அமலாக்கம் அதிகமாக தொற்றிவரும் கோவிட்-19 தாக்கத்தை குறைக்க வித்திட்டாலும் சிறு தொழில் வியாபாரிகள் பல இன்னலுக்குத் தள்ளப்படுகின்றனர். தனது வியாபாரம் 50% வரை பாதிக்கக்கூடும் என கூறினார்.
எனவே, மாநில அரசாங்கம் சிறு தொழில் வியாபாரிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க உத்தேசிக்க வேண்டும். இதன் மூலம் சிறு தொழில் வியாபாரிகள் தங்கள் கடை வாடகை, செலவினங்கள் மற்றும் ஊழியர்கள் ஊதியம் வழங்க உதவிப்புரியும் என தெரிவித்தார்.
தற்போது தனது உணவக வியாபாரத்தை சமூக ஊடகங்களான முகநூல், புலனம் வாயிலாக விளம்பரம் செய்து ஆன்லைன் ஆர்டர் வழி உணவுகள் விநியோக்கிக்கப்படும், என்றார். மேலும், புட்பண்டா(food panda), கிரப்புட்(Grab food) ஆகிய இணைத்தள உணவு செயலிகளிலும் பதிவுச்செய்ய உத்தேசித்துள்ளதாகவும் கூறினார்.