பாயா தெருபோங்– புக்கிட் கூக்குஸ் இரட்டை வழி பாதை நிர்மாணிப்புத் திட்டம் 78 விழுக்காடு முழுமைப்பெற்ற வேளையில் வருகின்ற 2020, ஜூலை மாதம் முழுமைப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் பினாங்கு மாநகர் கழகம் தலைமையில் நிர்மாணிக்கப்பட்ட மிகப்பெரிய திட்டமாகவும் ரிம371மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படுவதாகவும் உள்ளூராட்சி, வீடமைப்பு மற்றும் நகர்புற & கிராமப்புற மேம்பாடு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர்
ஜெக்டிப் சிங் டியோ கூறினார்.
இந்த இரட்டை வழி பாதை திட்ட நிர்மாணிப்புப்பணிக்கு மட்டும் ரிம275,600,000 செலவிடப்படும். இதில் நில கையகப்படுத்தும் செலவு(ரிம83,509,670.50) மற்றும் ஆலோசனை சேவை செலவு (ரிம11,000,000) சேர்க்கப்படவில்லை. மாநகர் கழகம் இத்திட்டம் செயல்படுத்த 2016 முதல் 2018 ஆண்டு வரை நில கையகப்படுத்தும் செலவினத்தையும் சேர்த்து ரிம275,804,433 செலவிட்டுள்ளது. மாநகர் கழகம் இந்த சாலை நிர்மாணிப்புத் திட்டத்திற்காக இந்த ஆண்டு ரிம44,200,000 மற்றும் அடுத்த ஆண்டு(2020) ரிம37,355,000 நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி மாநகர் கழக வரவுசெலவின் 40 விழுக்காடு நிதி இத்திட்டத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது என ஜெக்டிப் விவரித்தார்.
பொதுப்பணி, பயன்பாடு மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாய்ரீல் கீர் ஜொஹாரி, மாநகர் கழகத் தலைவர் டத்தோ இயூ துங் சியாங், டத்தோ அட்னான் முகமது ராசாலி (மாநகர் கழகச் செயலாளர்) மற்றும் மேம்பாட்டாளர்கள் செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட நிலச்சரிவினால் இத்திட்டம் வரையறுக்கப்பட்ட கால அட்டவணையைக் காட்டிலும் தாமதமாக நிர்மாணிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வேலை நிறுத்தம் உத்தரவு பிரபிக்கப்பட்ட வேளையில் கடந்த பிப்ரவரி 28-ல் பினாங்கு மாநில தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை (DOSH) அனுமதியுடன் மீண்டும் நிர்மாணைப்புப் பணி தொடங்கப்பட்டது. தற்போது தாமான் துன் சர்டோன் பாதை இணைப்பதற்கு கட்டுமானப் பணிகள் கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பி.எல்.பி லான் சென்.பெர்ஹாட்(பி.எல்.பி) மற்றும் ஜியோ வெல்லி சென்.பெர்ஹாட் ஆகிய இரு மேம்பாட்டு நிறுவனங்களும் தற்போதுள்ள புக்கிட் கூக்குஸ் சாலையுடன் லெபோ புக்கிட் ஜம்புல் சாலையை 2.2கி/மீட்டர் தூரமும் துன் சர்டோன் லின்க் (500மீ) தூரமும் நிர்மாணிக்கும் என செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சாய்ரீல் குறிப்பிட்டார்.
“ஜியோ வெல்லி கட்டமைப்பில் 800மீட்டர் நிர்மாணிப்புப் பணி நிதிப்பிரச்சனையால் கால தாமதம் ஏற்பட்ட வேலையில் தற்போது அஸ்பேன் குரூப் நிறுவனத்துடன் இந்த மேம்பாட்டுப் பணி குறித்து ஒப்பந்த உடன்படுக்கையில் கையொப்பமிட்டது.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஆஸ்பென் குரூப் நிறுவனம் கட்டுமானப் பணியைத் தொடங்கும் என மாநில அரசிடம் அறிவிக்கப்பட்டது. இது முடிவடைய இரண்டு ஆண்டுகள் ஆகும். மேலும் 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 1400 மீட்டர் பி.எல்.பி–யின் கட்டுமானப்பணியும் நிதி நெருக்கடி எதிர்நோக்கியுள்ளது. எனவே, மாநில அரசு இந்த விஷயத்தில் மேலும் கலந்துரையாடல் நடத்தும், என்றார்.
“எனவே, நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையாக இத்திட்டத்தின் மற்ற இரண்டு பகுதிகளும் நிறைவடையாவிட்டாலும் அதைப் பயன்படுத்தக்கூடிய வகையில் புதிய சாலையை உருவாக்குவோம்” என்று அவர் கூறினார்.