புக்கிட் தம்புன் – “மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு கல்வி அடித்தளமாக அமைகிறது. கோவிட்-19 தொற்றுநோய் தாக்கம் மாணவர்கள் இயங்கலை வாயிலாகக் கல்வியைக் கற்க ஊக்குவிக்கிறது. எனவே, மாணவர்கள் இச்சூழ்நிலைக்கு ஏற்ப தொழில்நுட்பத்தில் வல்லமைக் கொள்ள வேண்டும்.
“மாணவர்கள் கற்றல் கற்பித்தலில் சிறந்து விளங்க கணினி, மடிக்கணினி, இணையம் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் அவசியம்,” என சமூகத்துடன் ஒன்றிணைவோம் என்ற நிகழ்ச்சியில் புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர் கோ சூன் அய்க் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சி பினாங்கு முத்தியாரா மகளிர் இயக்கம் மற்றும் புக்கிட் தம்புன் சட்டமன்ற சேவை மைய இணை ஆதரவில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பி40 குழுவைச் சேர்ந்த 15 மாணவர்களுக்கு கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க புதிய மடிக்கணினிகள் இலவசமாக வழங்கப்பட்டது. இது புக்கிட் தம்புன் தொகுதியைச் சேர்ந்த பி40 மற்றும் தனித்து வாழும் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில முதல்வரின் துணைவியார் மதிப்பிற்குரிய தான் கென் லீ; Plastech Precision Holding Sdn Bhd நிறுவன மேலாளர் எமிலி; மலேசிய சிநேகம் சமூகநல அமைப்புத் தலைவர் டத்தோ டாக்டர் புளோரன்ஸ்; புக்கிட் தம்புன் தொகுதி
பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டுக் குழு(JPWK) உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
மேலும், தாய்மார்கள் மற்றும் தனித்து வாழும் தாய்மார்கள் வாழ்க்கையில் எதிர்நோக்கும் இன்னல்களைத் தகர்த்து வெற்றி நடைப்போட டத்தோ டாக்டர் புளோரன்ஸ் தலைமையில் நெறியுரை வழங்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, மாணவர்களிடையே ஒற்றுமையைப் பலப்படுத்த குழு முறையில் விளையாட்டுகளும் நடத்தப்பட்டது. மேலும், தன்முன்னைப்பு கலந்துரையாடலும் இடம்பெற்றது.
“ஒற்றுமை, நல்லிணக்கம் மிக்க குடும்பம் சிறந்த பிள்ளைகளை உருவாக்க முடியும். சிறந்த பிள்ளைகள் கல்வியில் சிறந்த அடைவுநிலைப் பெற்று எதிர்காலத்தில் சமூக மேம்பாட்டுக்கும் பங்களிக்க வித்திடும்,” முதல்வரின் துணைவியாரும் பினாங்கு முத்தியாரா மகளிர் இயக்கத் தலைவருமான
தான் கென் லீ இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பி40 குழுவைச் சேர்ந்த தாய்மார்களுக்கு உணவுக் கூடைகளும் வழங்கப்பட்டன.