புக்கிட் மெர்தாஜாம் பொதுச் சந்தை கடுமையான கண்காணிப்புடன் மீண்டும் செயல்படத் தொடங்கியது

Admin

புக்கிட் மெர்தாஜாம் – ஜாலான் பசார் திரள் காரணமாக கடந்த மே,31 முதல் மூடப்பட்டிருந்த புக்கிட் மெர்தாஜாம் பொதுச் சந்தை, செபராங் பிறை மாநகர் கழகத்தின் (எம்.பி.எஸ்.பி) கடுமையான கண்காணிப்புடன் மீண்டும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது.

எம்.பி.எஸ்.பி மேயர், டத்தோ ரோசாலி மொஹமட் அச்சந்தையின் அனைத்து வியாபாரிகளும் ஊழியர்களும் 10 நாள் கோவிட்-19 தனிமைப்படுத்தும் காலக்கெடு முடிந்தவுடன், இச்சந்தை மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படுவதாக கூறினார்.

2021-ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி நிலவரப்படி  253 வியாபாரிகள் திரையிடப்பட்டதில்  31 பேர்கள் கோவிட்-19 தொற்றுக்கு பாதிக்கப்பட்டனர்.

“மத்திய செபராங் பிறை  மாவட்ட சுகாதார அலுவலகத்தின் மேற்பார்வையில் உள்ள எந்தவொரு வியாபாரிகளும் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்ட காலகெடு முடியாமல் இந்த சந்தையில் எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனுமதி இல்லை என எம்.பி.எஸ்.பி திட்டவட்டமாக தெரிவித்தது.

“அதுமட்டுமின்றி வளாகத்தின் உரிமையாளர் அல்லது வியாபாரி வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் அவர்கள் கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மேலும், அவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அத்தொற்று இல்லாததை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

“நாங்கள் (எம்.பி.எஸ்.பி) தொடர்  கண்காணிப்புகளை மேற்கொள்வோம். மேலும் விதிமுறைகளை பின்பற்றாத மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விதிகளை மீறும் வியாபாரிகள் மீது தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டத்தின் (ACT 342) கீழ்  சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம், ” என புக்கிட் மெர்தாஜாம் பொதுச் சந்தைக்கு வருகையளித்தப்போது வீட்டுவசதி, உள்ளூராட்சி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ  செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

எம்.பி.எஸ்.பி கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் எம்.பி.எஸ்.பி உரிம இயக்குனர் பைட்ரோல் மொஹட் ராட்ஸி  ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதற்காக, நேற்று இரவு 8.00 மணி முதல் கவுன்சில் அனைத்து விதிகளும் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய இத்தளத்தை கண்காணிக்கத் தொடங்கியது.

மொத்தம் 253 வியாபாரிகளில், சுமார் 93 வியாபாரிகள் அல்லது 37 சதவீதம் பேர் மட்டுமே இன்று தங்கள் வணிக நடவடிக்கைகளைத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், வியாபாரிகளைத் தவிர, பொதுமக்களும்   நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஓ.பி) முழுமையாக இணங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ரோசாலி நினைவுறுத்தினார்.

பொதுமக்களும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஓ.பி) முழுமையாக இணங்குவதை உறுதி செய்ய வேண்டும்

அதே செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெக்டிப், இரு ஊராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகளையும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வலியுறுத்துள்ளார்.

“கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் மலேசிய காவல்துறையினர் மற்றும் அதிகாரத்தில் உள்ள பிற பொறுப்பாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் மிகுந்த கண்டிப்புடன் செயல்பட வேண்டும்.

“இப்போரில் வெற்றிப்பெற கட்டுபாடுகளுக்கு இணங்காத தரப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது தவிர வேறு வழி இல்லை,” என்று ஜெக்டிப் அனைத்து தரப்பினரையும் நினைவுறுத்தினார்.