பிறை – பினாங்கு மாநில அரசாங்கம்,
செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) மூலம் இன்று பிறையில் உள்ள சாய் லெங் பார்க், லெபோ குராவ் 5 இல் உள்ள உணவக மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ அசார் அர்ஷாத் கூறுகையில், இந்த உணவகத்தை மேம்படுத்தும் திட்டம் ரிம5 மில்லியன் செலவில் இந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.
“இத்திட்டத்தை முழுமையாக முடிக்க சுமார் 24 மாதங்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகும்.
இந்த உணவகக் கட்டிடத்தில் 90க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபாரம் செய்ய ஏதுவான வசதி, உணவு வளாகம், கழிப்பறைகள் மற்றும் இதர வசதிகளுடன் அமைக்கப்படும்.
“இந்த உணவக மேம்பாட்டுத் திட்டம் முடிவடையும் வரை, வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் தங்கள் வணிகங்களை நடத்துவதற்காக தற்காலிகமாக சாய் லெங் பார்க் பல்நோக்கு மண்டப வளாகத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
“எனவே, இந்த மேம்பாட்டுத் திட்டம் சுமூகமாக இயங்கி, நிர்ணயிக்கப்பட்ட காலவரையறைக்குள் முடிக்கப்படும்,” என்று பிறையில் உள்ள சாய் லெங் பார்க்க பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுடனான கலந்துரையாடலின் போது அசார் தமது உரையில் கூறினார்.
மேலும், மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் மற்றும் இரண்டாம் துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் ப. இராமசாமி ஆகியோர் இந்த விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
லெபோ குராவ்,5 இல் உள்ள உணவக தொடர்புடைய வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு நற்செய்தியைத் தெரிவிக்கவும், இத்திட்டத்தின் விவரங்களை விவரிக்கவும் இந்த அமர்வு நடைபெற்றது.
இதற்கிடையில், இந்த இடம் பாழடைந்த நிலையில் உள்ளதோடு, ஏற்கனவே 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதாலும், இந்த உணவகத்தை மேம்படுத்தும் திட்டம் சரியான நேரத்தில் அமல்படுத்துவதாக சாவ் கூறினார்.
“இதனிடையே, இந்த மேம்பாட்டுத் திட்டம் முடிவடைந்தவுடன், சாய் லெங் பார்க்கில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்ல, மத்திய செபராங் பிறை, குறிப்பாக செபராங் ஜெயா மற்றும் பண்டார் பெர்டாவில் அருகிலுள்ள பகுதி மக்களும் பயனடைவார்கள்,” என சாவ் குறிப்பிட்டார்.
ஆயர் ஈத்தாம் மற்றும் தெலுக் பஹாங் அணைகளில் மேக விதைப்பு நடவடிக்கைகளின் நிலை குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP) ஏற்கனவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது, என்று சாவ் பதிலளித்தார்.
“மேலும், அணைகளின் நீர்ப்பிடிப்புப்
பகுதிகளில் உண்மையில் மழை பொழிகிறதா இல்லையா என்பதை அடுத்த சில நாட்களில் தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு நிகழவில்லை எனில், வேறு மாற்று வழியை நாங்கள் முன்வைப்போம்,” என்றார்.
இன்று மதியம் 1.00 மணி நிலவரப்படி, அயிர் ஈத்தாம் மற்றும் தெலுக் பஹாங் அணையின் கொள்ளளவு முறையே 41.5% மற்றும் 48.7% ஆகும்.