ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு மற்றும் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு ஏற்பாட்டில் உயர்கல்வி வழிகாட்டி கண்காட்சி 2020 வருகின்ற ஜூலை மாதம் 10 முதல் 12 வரை காலை மணி 10.00 தொடங்கி மாலை 6.00 மணி வரை நடைபெறும். கோவிட்-19 தாக்கத்தால் இம்முறை இக்கண்காட்சி புதிய இயல்பை பின்பற்றி மின்னியல் முறையில் நடைபெறும் என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அறிவித்தார்.
இந்த உயர்கல்வி வழிகாட்டி கண்காட்சி பிரத்தியேகமாக மலேசிய கல்வி சான்றிதழ் (எஸ்.பி.எம்) மற்றும் மலேசிய கல்வி உயர்நிலை சான்றிதழ் (எஸ்.டி.பி.எம்) முடிவுகள் பெற்ற மாணவர்கள் தங்களின் மேற்கல்வியைத் தொடர சிறந்த வழிகாட்டியாக திகழும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது .
மேலும், மாணவர்கள் மின்னியல் முறையைப் பயன்படுத்தி உயர்கல்வி குறித்த தகவல்கள் அறிந்து தேர்வுகள் செய்வதற்கும் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஆலோசகர்களுடன் மாணவர்கள் நேருக்கு நேர் சந்திக்க இத்திட்டம் சிறந்த தலமாக அமையும் என பொருளாதார திட்டமிடல், கல்வி, மனித மூலதனம் வளர்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம் & புத்தாக்க ஆட்சிக்குழு உறுப்பினருமான பேராசிரியர் நம்பிக்கை தெரிவித்தார்.
2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்வி கண்காட்சியில் இவ்வாண்டு 5 தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி மையங்கள் (TVET), 23 அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி என சுமார் 28 கல்வி மையங்கள் இந்த மின்னியல் உயர்கல்வி வழிகாட்டி கண்காட்சியில் பங்கு வகிக்கும்.
மார்ச் மாதம் நடத்தப்பட வேண்டிய இக்கண்காட்சி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் ஜூலை மாதம் ஒத்திவைக்கப்பட்டது. மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கத்தில் இருக்கும் வேளையில் இம்முறை இக்கண்காட்சி மின்னியல் முறையில் அமல்படுத்தப்படுகிறது என பினாங்கு எக்ஸ்போ தலைமை நிர்வாக அதிகாரி பிரான்சிஸ் வோங் செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.
புதிய இயல்பில் நடைபெறும் உயர்கல்வி வழிகாட்டி கண்காட்சியில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.மாணவர்கள் penangonlineeducationfair.com அகப்பக்கத்தை அணுகி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஆலோசகர்களிடம் இருந்து தகவல்கள் பெற்றுக்கொள்ளவும்.
இக்கண்காட்சியில் பங்கெடுக்கவிரும்பும் மாணவர்கள் முன் பதிவு செய்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர். மாணவர்கள் பிரச்சூரம் மற்றும் பதாகைகளில் இருக்கும் கியூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தும் கொள்ளலாம்.
இதனிடையே, இக்கண்காட்சி பற்றிய மேல் விபரங்களுக்கு பினாங்கு எக்ஸ்போ அகப்பக்கத்தை (http://www.penexpo.com.my) வலம் வரலாம் அல்லது இரேன் (012-4447471), திரு.வோங் (0165594008) மற்றும் குமாரி. வோங் (013-4884008) என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.