கெபூன் பூங்கா- இந்துக்கள் நாடு தழுவிய நிலையில் குறிப்பாக பினாங்கு வாழ் மக்கள் புதிய இயல்பு முறையில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைக்கு (எஸ்.ஓ.பி) இணங்க இன்று அணுசரிக்கப்படும் தைப்பூசக் கொண்டாட்டத்தை தத்தம் வீட்டிலேயே வரவேற்றிருக்கின்றனர்.
மலேசிய அளவில் பத்துமலை, கல்லுமலைக்கு அடுத்து தைப்பூசத் திருநாளை மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் தலமாகப் பினாங்கு, தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயம் திகழ்கிறது. இந்த ஆண்டு 235-வது முறையாக தைப்பூசத் திருவிழாவை மிகவும் மிதமான முறையில் கொண்டாடப்படுகிறது.
தைப்பூசம் என்பது தமிழ்க்கடவுளான முருகப்பெருமானுக்குரிய விழாவாகும். இவ்விழா ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது
கோவிட்-19 பெருந்தொற்றின் பரவலால் இக்கொண்டாட்டத்திற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் முருகப்பெருமானின் ஆசிப் பெற அது தடைக்கல்லாக இருக்காது என மாநில தலைவர்களும், மக்கள் பிரதிநிகளும், இந்து அறப்பணி வாரிய ஆணையர்களும் தங்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி, பினாங்கில் புதிய இயல்பில் அமைதியான முறையில் தைப்பூசக் கொண்டாட்டத்தை வரவேற்பதாகக் கூறினார். மாநில அரசு, தேசிய பாதுகாப்பு மன்றம்(எம்.கே.என்), அரசு துறைகள், பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஆகிய தரப்புடன் முன்னதாகவே நடத்திய சந்திப்புக் கூட்டத்தின் ஒரு மித்த முடிவின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப இந்த ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா கொண்டாட்டம், இரத ஊர்வலங்கள் என அனைத்து கொண்டாட்டங்களையும் ரத்து செய்யப்பட்டு மிதமான முறையில் எஸ்.ஓ.பி பின்பற்றி கொண்டாடுவதை உறுதிப்படுத்தினார்.
இவ்வேளையில், இந்த ஆண்டுக்கான தைப்பூசக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தாய் கோவிலான குவின் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து முருகப்பெருமானின் ‘வேல்’ புறப்பட்டு இன்று அதிகாலையில் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்திற்கு வந்து அடைந்து இவ்விழா இனிதே தொடங்கியது. இந்த ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தங்க இரத ஊர்வலம் இடம்பெறாவிட்டாலும் சமயம், பண்பாடு குறையாது இறை நம்பிக்கையுடன் இவ்விழா கொண்டாடப்படுகிறது, என இந்து அறப்பணி வாரியத் தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ இராமச்சந்திரன் கூறினார்.
ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் தைப்பூசத் தினத்தை முன்னிட்டு ஆகம முறைப்படி அனைத்து பூஜைகள், உபயங்கள் மற்றும் வழிப்பாடுகள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டுக்கான தைப்பூசக் கொண்டாட்டத்தில் பொது மக்கள் வருகைக்கு தடைவிதிக்கப்பட்டதைத் தொடர்ந்து முருகப்பெருமானின் ஆசிப்பெறும் பொருட்டு https://m.facebook.com/waterfallmurugantemple முகநூலில் இயங்கலை வாயிலாக அனைத்து வழிபாட்டுகளும் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் அர்ச்சனை, நன்கொடை மற்றும் பால் அபிஷேகம் செய்ய விரும்பும் பொது மக்கள் தொடர்ந்து இயங்கலை வாயிலாக மின் கட்டணம் செலுத்துகின்றனர், என ஆலயத் தலைவர் டத்தோ சுப்பிரமணியம் தெரிவித்தார்.
படம் : (அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயம் முகநூல்)