பத்து உபான் – விரைவில் இந்தியர்கள் கொண்டாடவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வசதி குறைந்தவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு மிக விமரிசையாக நடைபெற்றது. பத்து உபான் சட்டமன்ற தொகுதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி தத்தம் இரண்டு நாட்களுக்கு பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையம் மற்றும் பத்து உபான் சட்டமன்ற சேவை மையத்தில் நடைப்பெற்றன.
ஒவ்வொரு வருடமும் பத்து உபான் சட்டமன்ற சேவை மையம் வசதி குறைந்த குடும்பங்கள், ஆதரவற்ற சிறார்கள், தனித்துவாழும் தாய்மார்கள், மூத்த குடிமக்கள் ஆகிய தரப்பினருக்கு பல நன்மைகளை செய்து வருவது பாராட்டக்குறியதாகும். இதனை தொடரும் முயற்சியில் இவ்வட்டாரத்தில் 100-க்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்களுக்கு பரிசுக்கூடை, அன்பளிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்.
இப்பரிசுப் பொருட்கள் பாயான் பாரு சட்டமன்ற உறுப்பினர் சிம் தீ சின் மற்றும் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் அவர்களின் பொற்கரத்தால் எடுத்து வழங்கப்பட்டன. கடந்தாண்டு இச்சேவை மையத்தின் சார்பில் பொதுமக்களுக்கு பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. ஆனால், இம்முறை தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஏற்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
“இம்முறை புதிய இயல்பில் நாம் தீபாவளியை கொண்டாடவிருக்கிறோம். கோவிட்-19 தாக்கத்தால் வழக்குகள் பினாங்கில் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் இக்கொண்டாட்டத்தின் போது நிர்ணயிக்கப்பட்டுள்ள நிர்வாக நடைமுறையை (எஸ்.ஓ.பி) அனைவரும் முறையாக பின்பற்றி இத்தீபாவளியை கொண்டாடுவோம். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் கைத்தூய்மியை பயன்படுத்துதல் போன்ற கடப்பாட்டினை பின்பற்றி பாதுகாப்பான முறையில் ஒன்றிணைந்து தீபாவளியை கொண்டாடுவோம்,” என இந்நிகழ்ச்சியின் தமதுரையில் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் பொதுமக்களுக்கு நினைவுறுத்தினார்.
தொடர்ந்து, மாநில அரசின் சமூகநலத் திட்டங்கள், நம்பிக்கை கடனுதவி திட்டம் போன்ற திட்டங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொதுமக்கள் பத்து உபான் சேவை மையத்தை அணுகுமாறு அவர் கோரிக்கை விடுத்தார். விவசாயம், சிறுதொழில் போன்றவற்றை செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு வழிகாட்ட பத்து உபான் சேவை மையம் எப்பொழுதும் முன்னோடியாக விளங்கும் என குமரேசன் நம்பிக்கை தெரிவித்தார்.