ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் ஒரு புதிய புறநகர் உருமாற்ற மையத்தை (UTC) உருவாக்க நிதி அமைச்சு (MOF) பல கூறுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், இன்று காலை 15-வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் இரண்டாவது தவணையின் முதல் கூட்டத்தில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் எழுப்பிய வாய்வழி கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
மத்திய அரசாங்கம் ஒரு UTC-ஐ
நிறுவுவதில் பல கூறுகளைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது, என்றார்.
“ஏனெனில், ஒரு UTC ஸ்தாபனம் மற்றும் நிர்வாகம் பிரிவு 4 இன் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டது. இதில் UTC-ஐ நிறுவுதல், கட்டிடத்தைப் புதுப்பித்தல், மேம்படுத்துதல் மற்றும் சிறப்பு நிறுவன உபகரணங்கள் மற்றும் பிற அலுவலக உபகரணங்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை வழங்குவதற்கான நிதியை நிதி அமைச்சு ஏற்க வேண்டும்.
அதேவேளையில், UTC செயல்பாட்டிற்கு வந்ததும், மத்திய அரசு, அதன் ஏஜென்சிகளுக்கான அலுவலக இடத்தின் வாடகை மற்றும் பராமரிப்புச் செலவுகள் மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்கள், ஊழியர்களின் கூடுதல் நேரக் கொடுப்பனவுகள் மற்றும் பல்வேறு தொடர்புடைய செலவுகள் போன்ற பிற நிறுவனங்களின் இயக்கச் செலவுகளை ஈடுகட்ட வேண்டும்,” என்று பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் சாவ் கூறினார்.
புதிய UTC நிறுவப்படுவதைக் கருத்தில் கொள்ளும்போது, ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல், தற்போதுள்ள அதிகாரிகள் இடமாற்றத்தை மேற்கொள்ள அதன் ஏஜென்சியின் திறனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
“எனவே, நாட்டின் தற்போதைய நிதி நிலையைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள 23 UTC மையங்கள் போதுமானது என்று நிதி அமைச்சு கருதுகிறது.
“தற்போது நிதி அமைச்சுக்கு புதிய UTC-ஐ உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை,” என்று முதலமைச்சர் கூறினார்.
கொம்தார் கட்டிடத்தில் இயங்கும் பினாங்கு UTC கடந்த 2020 ஆகஸ்ட்,15 அன்று திறக்கப்பட்டது.
அன்று முதல் 2024 ஏப்ரல் வரை மொத்தம் 1,211,721 வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
செபராங் பிறையில் மத்திய மற்றும் மாநில சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் மையப்படுத்துதல் தொடர்பான சட்டமன்ற உறுப்பினர் குமரனின் கூடுதல் கேள்விக்கு தற்போது மாநில அரசு டிஜிட்டல் மயமாக்கல் மூலம் சேவைகளை வழங்குவதில் முன்னுரிமை அளித்து செயல்படுவதாக கொன் இயோவ் கூறினார்.
“உதாரணமாக, தற்போது 23 துறைகள் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் இணைய வழி சேவைகளை வெற்றிகரமாக தொடங்கியுள்ளன.
” இந்த டிஜிட்டல் மயமாக்கலில் பின்தங்கிய குழுவினர் குறிப்பாக முதியோர்கள் இருப்பதை மாநில அரசு அறிந்திருக்கிறது.
“எனவே, டிஜிட்டல் பினாங்கு மூலம் முதியோர்கள் இணைய வழி செயலியைப் பயன்படுத்த வழிகாட்டி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
“கூடுதலாக, அந்தந்த மாவட்டங்களில் மையப்படுத்தப்பட்ட மாநில மற்றும் கூட்டரசு அலுவலகங்கள் உள்ளன. அதே நேரத்தில் ஊராட்சி மன்றத்தின் கீழ், மக்களுக்கு நெருக்கமான சேவைகளை வழங்க பல கிளை அலுவலகங்கள் உள்ளன,” என்று நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக, செபராங் பிறை பகுதியில் புதிய UTC-ஐ உருவாக்கும் எண்ணம் குறித்து நிதி அமைச்சுக்குக் கடிதம் அனுப்பியதாக குமரன் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.