புத்ரா ஜெயாவை மீண்டும் கைப்பற்ற அதிக தொகுதிகளை வெல்ல வேண்டும் – சாவ்

Admin

புக்கிட் தெங்கா – பக்காத்தான் ஹராப்பான் (PH) 15வது பொதுத் தேர்தலில் வலுவான மற்றும் நிலையான கூட்டரசு அரசாங்கத்தை அமைப்பதற்கு அதிகமான நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்ற வேண்டும்.

நம்பகமற்ற தலைமைத்துவத்தால் தற்போது நமது நாடு பலவீனமான நிலையில் இருப்பதை மீட்டெடுக்கவும் கட்டியெழுப்புவதற்கும் 15வது பொதுச் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் மாபெரும் வெற்றி அடைவது அவசியம் என்று பத்து காவான் நாடாளுமன்ற வேட்பாளர் சாவ் கொன் இயோவ் கூறினார்.

“இம்முறை, பக்காத்தான் ஹரப்பானின்
புதிய தலைமைத்துவத்தின் கீழ் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களை பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளோம்.

“அவர் அரசியலில் மிகுந்த அனுபவம் கொண்டவர். அவர் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினராகவும், துணைப் பிரதமராகவும் மற்றும் சிறந்த நிதி அமைச்சராகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

“இதை நினைவாக்க, புத்ராஜெயாவில் உள்ள தேசிய முன்னணி (BN) மற்றும் தேசிய கூட்டணி (PN) ஆகியவற்றை மாற்றுவதற்கு மக்கள், குறிப்பாக பத்து காவானில் குடிமக்கள் பக்காத்தான் ஹரப்பானுக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும்,” என்று தாமான் செந்தூல் ஜெயா மண்டபத்தில் நடைபெற்ற பொது மக்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் சாவ் இவ்வாறு கூறினார்.

மேலும், புக்கிட் தெங்கா மாநில சட்டமன்ற உறுப்பினர், கூய் சியோ-லியுங் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் ஆதரவாளர்களும் களமிரங்கினர்.

அதே நேரத்தில், பினாங்கின் முதல்வராக இருக்கும் கொன் இயோவ், கடந்த மூன்று முறை பாக்காத்தான் ஹரப்பான் அளித்த ஆதரவிற்கு பத்து காவானில் உள்ள வாக்காளர்களுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

“கடந்த 14வது பொதுத் தேர்தலில் பத்து காவான் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், அதன் மூன்று மாநில சட்டமன்ற (DUN) தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெற்றோம். ஏனெனில், மாநில அரசாங்க நிர்வாகத்தில் கொண்டு வந்த மாற்றத்தை கண்டு பொது மக்கள் ஆதரவை நல்கினர்.

“எங்களுக்கு பொது மக்களிடம் இருந்து பேராதரவு கிடைப்பதால், எங்களுக்கு வலுவான மாநில அரசை உருவாக்க முடிகிறது,” என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, கொன் இயோவ் மற்றும் ஆதரவாளர்கள் இங்குள்ள ஜாலான் புக்கிட் மின்யாக்கில் உள்ள வணிக வளாகங்களில் பிரச்சாரத்தைத் தொடர்ந்தனர்.

2008-ஆம் ஆண்டு முதல் பினாங்கு மாநில அரசு பக்காத்தான் ஆட்சியின் கீழ் ஆற்றல், பொறுப்பு மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தில் மிகுந்த திருப்தி அடைவதாக முத்துச் செய்திகள் நாளிதழ் நிருபர் சந்தித்த வணிக ஊழியர் ஒருவர் கூறினார்.

“15வது பொதுத் தேர்தலில் ஒரு கூட்டரசு அரசாங்கத்தை நிறுவுவதற்கான அதிகாரத்தை பக்காத்தான் ஹரப்பான் பெறும் என்று நம்புகிறேன். கூடிய விரைவில், புக்கிட் மின்யாக் வணிகப் பகுதியைச் சுற்றியுள்ள போக்குவரத்து நெரிசல் மற்றும் வெள்ள நிவாரணத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்று அவர் கூறினார்.