பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு குரல்கொடுக்க வேண்டும் – சோங் எங்

Admin

 

குளுகோர் – பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு குரல்கொடுக்கும் வகையில் ‘பினாங்கு கோஸ் ஆரஞ்சு’ திட்டத்தை ஐந்தாவது ஆண்டாக நடத்தியதாக அதன் நிறைவு விழாவில் குடும்ப & மகளிர் மேம்பாடு, பாலின சமத்துவம், இஸ்லாம் அல்லாத மத அலுவல்கள் ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் அவர்கள் தயக்கமின்றி முன்வந்து தனக்கு நிகழும் பாலியல் வன்கொடுமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது என பாடாங் லாலாங் சட்டமன்ற உறுப்பினருமான சோங் எங் தமது வரவேற்புரையில் இவ்வாறு கூறினார். பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் துடைத்தொழிக்க பலவித திட்டங்கள் மற்றும் சட்டங்களை உருவாக்க அனைத்து தரப்பினரும் இணக்கம் கொள்ளும் வகையில் ரெஸ்கம் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மகளிர், குடும்பம் & சமுதாய மேம்பாட்டு துணை அமைச்சர் ஹன்னா இயோ, பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழக தலைமை நிர்வாக அதிகாரி ஒங் பீ லெங், சுங்கை பினாங் சட்டமன்ற உறுப்பினர் லிம் சியூ கிம், ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் செர்லீனா, பெராபிட் சட்டமன்ற உறுப்பினர் ஹெங் லீ லீ, அரசு சாரா இயக்கங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

சட்டத்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படும்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பாலியல் துன்புறுதல், சிறார் கொடுமை போன்றவைக்கு தீர்வுக்காண முடியும் என துணையமைச்சர் ஹன்னா தமதுரையில் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், பெண்களின் திருமண வயது குறைந்தப்பட்சம் 18 வயதுக்கு கொண்டு செல்ல மக்களவையில் தீர்மானிக்கப்படும் என்றார். இதன்மூலம், குழந்தைகள் கைவிடப்படுவதும் வீசப்படுவதும் குறைக்கப்படும். மேலும், பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு புரிதல் அதிகரிக்க பாலியல்’ கல்வி புகட்டப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, பணியிடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு வழங்கப்படும் புகார்களை முதலாளிகள் தக்க நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்க வேண்டும் எனவும் அவர் பரிந்துரை விடுத்தார். அரசுத்துறையில் ஏற்பட்ட பாலியல் துன்புறுதலுக்கு 21நாட்களில் அதிரடி நடவடிக்கை எடுத்த அமைச்சின் செயல் பாராட்டதற்குரியதாகும்.