பெராபிட் சட்டமன்ற கேலிச்சித்திர திட்டம் 4பி அணுகுமுறையை எளிய வடிவில் சித்தரிக்கிறது

புக்கிட் மெர்தாஜாம் – பெராபிட் சட்டமன்றம் மற்றும் பெண்கள் & குடும்ப மேம்பாட்டுக் குழு (ஜே.பி.டபள்யூ. கே) இணை ஏற்பாட்டில் ‘பெராபிட் சட்டமன்ற கேலிச்சித்திரம்’ தொடக்க விழா இனிதே நடைபெற்றது.

“கோவிட்-19 தொற்றுநோய் தாக்கம் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கத்தால் நமது வாழ்க்கை முறை புதிய இயல்பு முறையை நோக்கி பயணிக்கிறது.

“எனவே, பொது மக்களிடையே நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு (எஸ்.ஓ.பி) ஏற்ப சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், சோப்புடன் கைக்கழுவுதல் மற்றும் கோவிட்-19 தாக்கத்தை உணர்ந்து செயல்படுதல் போன்ற ‘4பி’ நடைமுறைகள் பின்பற்ற ஊக்கவிக்கும் பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது,” என இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து பெராபிட் சட்டமன்ற உறுப்பினர் எங் லீ லீ இவ்வாறு கூறினார்.

புதிய இயல்பில் 4பி நடைமுறைகளை பொது மக்களுக்கு எளிய முறையில் அறிவுறுத்தும் வகையில் இந்த கேலிச்சித்திரம் திட்டம் திகழ்கிறது, என்றார்.

இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டுக் குழுத் (ஜே.பி.டபள்யூ. கே) தலைவர் பெரின் லூ, நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுத் தலைவர் ஒங் சியூ சியூ மற்றும் கேலிச்சித்திர ஓவியர் அங் வெய் ஊன் கலந்து கொண்டனர்.

தற்போது மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை(பி.கே.பி.பி) அமலில் இருப்பதால் பொது நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ள இடைநீக்கம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொது மக்களுக்கு கோவிட்-19 தாக்கம் குறித்த விழிப்புணர்வு மற்றும் எஸ்.ஓ.பி விதிமுறைகள் புகட்டுவதற்கு இணையத்தளம் சிறந்த ஊடகமாகத் திகழ்கிறது.

இந்த புதிய இயல்பு முறையில் பொது மக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக நாட்டு நடப்புகளை அறிவதில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றனர். இதனை களமாக கொண்டு
பெராபிட் சட்டமன்றம் ‘பல விதமான பெராபிட்'(macam – macam Berapit) என்ற கேலிச்சித்திரங்கள் துணை கொண்டு 4பி விதிகளை மக்களுக்கு இலகுவாக கொண்டு சேர்க்கிறது. மேலும், புதிய இயல்பில் நடைமுறை படுத்தப்பட்ட இணைய வழி கற்றல், இணைய வழி பொருட்கள் வாங்குதல் ஆகிய கூறுகளும் இந்த கேலிச்சித்திரங்களில் நன்கு சித்தரிக்கப்படுகிறது.

இந்த கேலிச்சித்திரங்கள் அனைத்தும் பெராபிட் முகநூலில் பதிவேற்றம் செய்யப்படும் என எங் லீ லீ தெரிவித்தார்.

‘பல விதமான பெராபிட்’ எனும் திட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.