டத்தோ கெராமாட் – தாமான் பிரி ஸ்கூல் நகர்ப்புற மீளுருவாக்கம் திட்டத்திற்கானப் பெருந்திட்டப் போட்டியில் வெற்றியாளர்கள் வருகின்ற நவம்பர் 1 ஆம் தேதி கொம்தார் நடைப்பயணம்(Komtar Walk) நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்.
மலாயா பல்கலைக்கழகம், மலேசிய தொழில்நுட்பம் பல்கலைக்கழகம்
(UTM), அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகம்(UIAM), பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகம்(USM), மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்(UiTM) மற்றும் சுல்தான் அப்துல் ஹலிம் முவட்ஷம் ஷா போலிதெட்னிக் (POLIMAS)
ஆகிய பொது உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு இப்போட்டியில் பங்கேற்க வாய்ப்பு நல்கப்பட்டுள்ளது.
மாநில உள்ளாட்சி, வீட்டுவசதி, நகரம் மற்றும் கிராமப்புற ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ கூறுகையில், பினாங்கு PLANMalaysia நிறுவனம் பினாங்கு தாமான் பிரி ஸ்கூல் அடுக்குமாடி குடியிருப்பை இப்போட்டிக்கு தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார். இது அக்டோபர்,12 முதல் இன்று வரை நடைபெற்று வருகிறது.
மாநில அரசு, நகர்ப்புற மீளுருவாக்கம் திட்டத்திற்காக ஐந்து பழைய வீடமைப்புத் திட்டங்களை அடையாளம் கண்டுள்ளன, அவை பாயான் பாருவில் உள்ள 5-போயிண்ட் புலோக் , ரிப்ல் ரேஞ்ச் அடுக்குமாடி குடியிருப்பு, தாமான் பிரி ஸ்கூல் குடியிருப்பு, மாக் மண்டின் குடியிருப்பு மற்றும் தாமான் சியாகாப் குடியிருப்பு ஆகியவை அடங்கும், என்றார்.
“பாயான் பாருவில் உள்ள 5 போயிண்ட் புலோக் புதுப்பித்தல் திட்டத்திற்கான திட்டமிடல் தற்போது மேம்பாடுக் கண்டு வருகிறது. இதற்குப் பிறகு, செபராங் பிறையில் ஒரு திட்டத்தையும், தாமான் பிரி ஸ்கூலில் மூன்றாவது திட்டத்தையும் மேற்கொள்ள திட்டமிடப்படுகிறது.
“தாமான் பிரி ஸ்கூலில் 1,128 வீடுகள் உள்ளன, அவை ஏறக்குறைய 200 சதுர அடி முதல் 300 – 400 சதுர அடி வரையில் உள்ளன. சில வீடுகளில் ஒரு அறை மட்டுமே உள்ளன.
“வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் குறைந்தபட்சம் 650 சதுர அடி முதல் 850 சதுர அடி வரை இருக்கும். ஒவ்வொரு உரிமையாளரும் ஒரு வீட்டை இலவசமாகப் பெறுவார்கள்.
“மேலும், நீச்சல் குளம் போன்ற கூடுதலான பொது வசதிகளை உருவாக்க வேண்டும்,” என்று தாமான் பிரி ஸ்கூல் குடியிருப்பில் நடைபெற்ற இந்தப் பெருந்திட்டப் போட்டியின் தொடக்க விழாவில் ஜெக்டிப் கூறினார்.
அவர் சமீபத்தில் இங்கிலாந்து சென்றிருந்தபோது, லண்டனில் உள்ள கிங்ஸ் கிராஸில் 76 ஹெக்டேர் பரப்பளவில் கொண்ட நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டம் தன்னைக் கவர்ந்ததாகக் கூறினார்.
இப்போட்டியின் நோக்கமானது, பொது உயர்கல்வி மாணவர்கள் மூலம் பெறப்படும் உள்ளீடுகளை மாநில அரசு பினாங்கு வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற மறுமலர்ச்சி திட்டங்கள் மேம்படுத்த துணைபுரியும் என பினாங்கு PLANMalaysia இயக்குனர் ரோசிதா ஹமித் தெரிவித்தார்.