தற்போது பினாங்கின் பெருநிலப்பகுதியில் குறிப்பாக நிபோங் திபால் வட்டாரத்தில் பல மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொண்டு துரித வளர்ச்சி அடைந்து வருகிறது. அண்மையில் நிபோங் திபால் பகுதியில் அமைந்துள்ள பைராம் தோட்டம், விக்டோரியா தோட்டம் மற்றும் கலிடோனியா தோட்ட மக்களின் வீடமைப்புப் பிரச்சனை குறித்த நற்செய்தி அறிவிக்க பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வு கடந்த 30/12/2017-ஆம் நாள் இந்தியர் சங்க அரங்கம், நிபோங் திபாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி மாநில அரசின் உதவியுடன் பைராம், விக்டோரியா மற்றும் கலிடோனியா தோட்ட மக்களின் வீட்டுப் பிரச்சனை தீர்வுக் காணப்பட்டதாக அறிவித்தார். பல ஆண்டுகளாக வீட்டுப் பிரச்சனை எதிர்நோக்கி வந்த தோட்ட மக்களுக்கு விரைவில் வீடுகள் கட்டித்தரப்படும் என அகம் மகிழ தெரிவித்தார்.
கலிடோனியா தோட்ட மக்களுக்காக 15.106 ஏக்கர் நிலப்பரப்பில் 136 தரை வீடுகள் நிர்மாணிக்கப்படும்.. விக்டோரியா தோட்ட மக்களுக்கு 1.6 ஏக்கர் நிலப்பரப்பில் 72 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அமைத்து தரப்படும். அதேவேளையில் பைராம் தோட்ட மக்களின் நலனுக்காக 76 தரை வீடுகளும், புதிய தோற்றத்தில் இரட்டை மாடிக் கொண்ட தமிழ்ப்பள்ளி மட்டுமின்றி இந்து ஆலயமும் கட்டப்படும். தொடக்கமாக பைராம் தோட்ட வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைப்பெறும் என பொது மக்களிடம் அறிவித்தார். அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களும் பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் ஒத்துழைப்புடன் இடம்பெறும்.
எனவே, மாநில அரசு என்றும் பொது மக்கள் குறிப்பாக இந்தியர்களின் நலனில் அக்கரைச் செலுத்தும் என பேராசிரியர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ, செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களான திரு டேவிட் மார்ஷல் மற்றும் திரு சத்திஸ் முனியாண்டி கலந்து கொண்டனர்.