செப்டம்பர் 13- தங்கக் கரையோரம் ( Golden Beach ) சீரமைக்கப்பட்டிருக்கும் பினாங்கு நகராண்மைக் கழகத்தின் பொதுக் கழிப்பறை ஒன்றை பராமரிக்கும் பொறுப்பைப் பினாங்கு முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் பத்து ஃபிரிங்கியில் அமைந்துள்ள லோன் பைன் தங்கும் விடுதியின் தலைமை நிர்வாகியிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கினார்.
கழிப்பறைத் தூய்மை என்பது அனைவரும் பேணிக் காக்க வேண்டிய ஒன்று. ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதற்குத் தூய்மையைக் கடைபிடித்தல் அவசியம். ‘சுத்தம் சுகம் தரும்’, எனவே ஒரு தூய்மையான சுற்றுச்சூழலே நம் சுகமான வாழ்வுக்கு வழிவகுக்கும் என்றால் அது மிகையாகாது. அவ்வகையில், ஓர் இடத்தின் தூய்மை அவ்விடத்தின் கழிப்பறையைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. அது போலவே, பொதுக் கழிப்பறைகளின் தூய்மை ஒரு மாநிலத்தின் அல்லது நாட்டின் பொறுப்பையும் நிர்வாகத் திறனையும் படம் பிடித்துக் காட்டும் வல்லமை கொண்டது எனலாம்.
பினாங்கில் சுமார் 57 பொதுக் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் மட்டுமன்றி வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளும் இப்பொது கழிப்பறைகளையே அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். எனவே, அதன் தூய்மையைப் பேணி உலகளவில் தூய்மையான பசுமையான பினாங்கு என்பதை நிலைநிறுத்தி சுற்றுலாத் துறையின் மூலம் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வது அவசியம் என பினாங்கு நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ ஹஜ்ஜா பத்தாயா வலியுறுத்தினார்.
மலேசியாவிலேயே மிகத் தூய்மையான கழிப்பறைகளைக் கொண்ட மாநிலமாகப் பினாங்கு மாநிலம் விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாநில அரசு நகராண்மைக் கழகத்கத்துடன் இணைந்து பல பொதுக் கழிப்பறைகளைச் சீரமைத்து தரம் மேம்படுத்தி வருகிறது. கழிப்பறைகள் மட்டுமன்றி பொது வசதிகளையும் மேம்படுத்தி பினாங்கு மக்களுக்கும் இம்மாநிலத்திற்குச் சுற்றுலா மேற்கொள்பவர்களுக்கும் உயர்தர வசதிகளை வழங்க வேண்டும் என்பதே மக்கள் கூட்டணி அரசின் முக்கிய நோக்கம் என முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் தம் உரையில் தெரிவித்தார்.