டத்தோ கெராமாட் – முழு முடக்க பி.கே.பி காலகட்டத்தில் பொதுச் சந்தைகளில் காலை 8.00 மணிக்குத் தொடங்கும் உணவு மற்றும் அங்காடி வணிகங்களின் இயக்க நேரம் உணவு மூலப்பொருட்கள் விற்கத்தொடங்கும் காலை 6.00 மணிக்கு ஏற்றவாறு செயல்பட
ஒருங்கிணைக்க வேண்டும்.
இன்று அதிகாலை இங்குள்ள தாமான் பிரி ஸ்கூல் பொதுச் சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை(எஸ்.ஓ.பி) இணங்குவது குறித்து அதிரடி சோதனை நடத்திய பின்னர் வீட்டுவசதி, உள்ளாட்சி, நகர்ப்புற & கிராமப்புற மேம்பாட்டு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர், ஜெக்டிப் சிங் டியோ இவ்வாறு தெரிவித்தார்.
வணிக நேரத்தை சீரமைப்புச் செய்வதன் மூலம், பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் ஒரே நேரத்தில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஒரே இடத்தில் எளிதாக பெற்றுக்கொள்ள முடியும், என்றார்.
“பொதுச் சந்தையில் வியாபாரம் செய்யும் உணவு விற்பனையாளர்களுக்கு காலை 8.00 மணி முதல் செயல்பட அனுமதித்த வேளையில் காய்கறி மற்றும் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு காலை 6.00 மணி முதல் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
“எனவே, ஒரே பொதுச் சந்தையில் வியாபாரம் செய்யும் அனைத்து வகையான வணிகங்களுக்கும் இயக்க நேரம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்,” என டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களான டேனியல் கூய் சீ சென், ஓங் ஆ தியோங், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர், எம்.பி.பி.பி செயலாளர் டத்தோ அட்னான் முகமட் ரசாலி மற்றும் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும், மத்திய அரசு இதற்கு முன்பு மாநில அரசு வழங்கிய நிதியுதவித் திட்டங்கள் போல பினாங்கு மாநில மக்கள் மற்றும் அங்காடி வியாபாரிகள் உட்பட அனைவருக்கும் நிதி ஒதுக்கீடு வழங்க முன் வர வேண்டும், என ஜெக்டிப் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.
“மாநில அரசு சார்பில் மக்களுக்கு உதவ எங்களால் முடிந்தவரை முயற்சிக்கிறோம். இருப்பினும், மத்திய அரசு பினாங்கு மாநில மக்களுக்கும் மலேசிய குடிமக்கள் என்ற அடிப்படையில் தேவையானதைச் செய்ய வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.