ஜார்ச்டவுன் – மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலப் பேரவை இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் 12வது முறையாக மாநில அளவலான தேசிய இரத்த தான மற்றும் உடல் உறுப்பு தான முகாம் நடைபெற்றது.
“பொது மக்களிடையே இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை மேலோங்க இம்மாதிரியான முகாம்கள் வழிவகுக்கும். இரத்த தானம் செய்வதன் மூலம் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்ற உணர்வை குறிப்பாக இளைஞர்கள் மனதில் பதிவு செய்ய வேண்டும்.
இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினருமான டேனியல் கூய் ஸி சென் இந்த முகாமை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து இவ்வாறு கூறினார்.
“மலேசிய இந்து சங்க ஏற்பாட்டில் இத்திட்டம் தேசிய மற்றும் மாநில ரீதியிலும் இளைஞர் பிரிவின் தலைமையில் ஒரு மாத காலவரையறையில் நடத்தப்படுகிறது.
அண்மையில் ஜனவரி,12 தொடங்கி பிப்ரவரி,28 ஆம் தேதி வரை இந்த முகாம் மாநில அளவில் 15 இடங்களில் நடத்தப்படும். அதேவேளையில், 500 நன்கொடையாளர்கள் இரத்தம் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்வார்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலப் பேரவையின் தலைவர் விவேக நாயகன் தர்மன் தெரிவித்தார்.
” இந்த முகாம் சமூகத்தால் தானம் செய்யப்பட்டு மீண்டும் சமூகத்திற்கே சென்றடைகிறது. இதனைப் பொது மக்கள் கருத்தில் கொண்டு இந்து சங்கம் ஏற்பாட்டில் நடத்தப்படும் இரத்த தானம் முகாமில் கலந்து கொண்டு பொது மருத்துவமனைகளில் இரத்த வங்கியை நிரப்ப இரத்த
தானம் செய்ய முன் வர வேண்டும்”.
“மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநிலப் பேரவையின் அதிகாரப்பூர்வ முகநூல் அகப்பக்கத்தில் மாநில அளவிலான இரத்த தான முகாம் பற்றிய தகவல்கள் பதிவேற்றப்படும்,” என மேலும் தெரிவித்தார்.
இந்த முகாம் இந்து சங்க இளைஞர் பிரிவின் கீழ் வழிநடத்தப்படுவது பாராட்டக்குறியதாகும். இம்மாதிரியான முகாம்கள் இளைஞர்கள் சமூகத்திற்குத் தொண்டாற்ற ஒரு சிறந்த களமாகத் திகழ்கிறது. இளைஞர்களின் பங்களிப்பு ஒரு சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்க வித்திடும்.