புலாவ் தீக்குஸ்- கோவிட்-19 தடுப்பூசி தற்போது நம் நாட்டில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டாலும், இம்மாநில பொது மக்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஓ.பி) பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வீடமைப்பு, உள்ளூராட்சி மற்றும் கிராமம் & நகர்ப்புற மேம்பாட்டு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ கூறுகையில், கோவிட் -19 தடுப்பூசி இந்த ஆண்டு பிப்ரவரி, 21 முதல் கட்டம் கட்டமாக பெறப்படுகின்றன. இதனால் எஸ்.ஓ.பி மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளைப் புறக்கணிக்கலாம் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.
“பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) ஆகிய இரு ஊராட்சி மன்றங்களையும் பொது இடங்களில் எஸ்.ஓ.பி-ஐ மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
“தற்போது தினசரி கோவிட்-19 வழக்கு பதிவுகள் சரிவுக்கண்டாலும், அதேவேளையில் தடுப்பூசி செலுத்த ஆரம்பித்த போதிலும்
கோவிட்-19 தொற்று நோய் பரவலைத் தடுப்பதற்கான கண்காணிப்பு மற்றும் அமலாக்கப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்,” என்று புலாவ் தீக்குஸ் பொதுச் சந்தையில் எஸ்.ஓ.பி அமலாக்கம் குறித்த திடீர் சோதனை மற்றும் முகக் கவசம் விநியோகத்திற்கு பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.
இக்கூட்டத்தில் எம்.பி.பி.பி செயலாளர், டத்தோ அட்னான் மொஹட். ரசாலி; புலாவ் தீக்குஸ் சட்டமன்ற உறுப்பினர், கிறிஸ் லீ சுன் கிட்; எம்.பி.பி.பி மற்றும் தொடர்புடைய துறைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், பொது மக்கள் ‘மைசெஜ்தெரா’ செயலியின் மூலம் தேசிய கோவிட் -19 நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெறுவதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
“மார்ச்,10-ஆம் நாள் தரவு அடிப்படையில், பினாங்கில் இதுவரை 226,690 நபர்கள் மட்டுமே தடுப்பூசி பெறுவதற்குப் பதிவு செய்துள்ளனர் என்பதை காட்டுகிறது.
“பினாங்கில் 1.78 மில்லியன் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிக குறைவாகவே காணப்படுகிறது.
“கோவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான போர் களத்தில் இன்னும் வெற்றி பெறாத நிலையில் பொது மக்கள் உடனடியாக தடுப்பூசி பெற விண்ணப்பிக்குமாறு வலியுறுத்தினார்.
எஸ்.ஓ.பி-ஐ பின்பற்ற தவறியதற்காக 30 வியாபார வளாகங்கள் 2021 மார்ச் வரை மூடப்பட்டுள்ளது.
பொது மக்கள் எஸ்.ஓ.பி-ஐ பொது இடங்களில் பின்பற்ற வழிகாட்டியாக விளங்கும் இரு ஊராட்சி மன்ற அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
“பினாங்கின் தீவு மற்றும் பெருநிலத்தில் பொது மக்கள் எஸ்.ஓ.பி-ஐ 99% பின்பற்றுகின்றனர் என்பதனை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைறேன்.
“வார நாட்களைக் காட்டிலும் வார இறுதியில் பொதுச் சந்தைகளில் மக்கள் நடமாட்டம் நெரிசலாகக் காணப்படுகிறது.
“எனவே, பொது மக்கள் எஸ்.ஓ.பி-ஐ பின்பற்றுவதை கண்காணிக்க கூடுதல் அமலாக்க அதிகாரிகள் பணியில் ஈடுபடுவர்,என்றார்.