பாயா தெருபோங் – பிறந்ததில் இருந்து மூளை சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வரும் ஆறு வயது சிறுவனான ஹெமென்ரா த/பெ தர்மேந்திரன் என்ற சிறுவனை புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் நேரில் சென்று சந்தித்தார்.
மூளை நோயால் பாதிக்கப்பட்ட இச்சிறுவன் பிறந்ததில் இருந்து நடக்கவோ நிர்க்கவோ முடியாது; முற்சக்கர நாற்காலியில் தான் அவரின் அன்றாட வாழ்நாட்களை கழித்து வருவதாக மூன்று பிள்ளைகளின் தந்தையான தர்மேந்திரன் செய்தியாளர்களிடம் விவரித்தார்.
இச்சிறுவனின் இரண்டு கண்களில் ஒன்று செயல் இழந்த வேளையில் மற்றொரு கண்ணை பாதுகாக்க பெற்றோர்கள் தலைநகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் பணப் பற்றாக்குறை காரணமாக தற்போது பினாங்கு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தனியார் நிறுவனத்தில் பணிப்புரியும் சிறுவனின் தந்தை குறிப்பிட்டார். மேலும், பண உதவிக்கோரி சமூக வலைதளங்களில் பதிவேற்றிய காணொலிவின் மூலம் ரிம5,000-க்கும் மேற்பட்ட பண உதவி கிடைக்கப்பெற்றுள்ளது.
புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் அவரின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து ரிம3,000 உதவித்தொகை எடுத்து வழங்கினார். செய்தியாளர்களிடம் பேசுகையில், இச்சிறுவனின் மருத்துவச் செலவிற்கு தம்மால் இயன்ற உதவிகள் புரியவிருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், பொது மக்கள் இச்சிறுவனின் மருத்துவ செலவிற்கு தங்களால் இயன்ற உதவிகள் வழங்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பிறந்த ஆறு மாதத்தில் இறந்து விடுவான் என மருத்துவர்கள் கூறியும் ஆறு வயதாகியும் போராடி கொண்டிருக்கும் இச்சிறுவனும் பிற மானிடரை போன்று வாழ்க்கை வாழ தம்மால் இயன்ற உதவியை புரிவோம். உதவிப்புரிய விரும்பும் நல்லுள்ளங்கள் தர்மேந்திரன் 016-4267680 என்ற தொலைப்பேசி எண்களில் தொடர்புக்கொள்ளலாம் அல்லது 157335101454 மலயன் வங்கிக்கு (May bank) வசந்தி என்ற வங்கி கணக்கிற்கு பண உதவி அனுப்பலாம்.