பொருட்களின் விலை உயர்வு, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடும்

Admin

செபராங் ஜெயா – ஜூலை 1-ஆம் தேதி முதல் கோழி, கோழி முட்டை மற்றும் பாட்டில் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் உச்சவரம்பு விலையை நீக்கப்படும் மத்திய அரசின் நடவடிக்கை மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில், பிரதமர் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, ஜூலை 1-ஆம் தேதிக்குப் பின்னர் பொருட்களின் விலை கட்டுப்பாடின்றி அதிகரிக்கக்கூடும் என முத்துச் செய்தி நாளிதழ் நிருபர்கள் மேற்கொண்ட நேர்க்காணலில் போது பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.

சலீம் யாக்கோப், 55 இரண்டு, மூன்று மற்றும் ஐந்து கிலோகிராம்களுக்கான போத்தல் சமையல் எண்ணெய் மானியத்தை ரத்து செய்வதால், அவர் நீண்ட காலமாக நடத்தி வரும் ‘ரொட்டி சானாய்’ வணிகத்தை நிச்சயமாகப் பாதிக்கும், என்றார்.

 

“அண்மைய காலமாக, சமையல் எண்ணெய் மட்டுமல்ல, கோதுமை மாவு, பருப்பு, கோழி முட்டை போன்ற பிற அடிப்படைப் பொருட்களின் விலையும் இப்போது அதிகரித்து வருகிறது.

“வியாபாரிகள் என்ற முறையில், நஷ்ட்டத்தைத் தவிர்க்க விற்பனை விலையை அதிகரிக்க வேண்டும் அல்லது அளவைக் குறைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்களும் இப்போது அழுத்தத்தில் இருக்கிறோம்.

“உதாரணமாக, ஒரு ‘ரொட்டி சானாய்’ இப்போது ஒன்று ரிம1.20-க்கு விற்கப்படுகிறது. கூடிய விரைவில் அது ரிம2.00 (ஒன்று) என அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படக்கூடும்,” என்று அவர் இன்று காலை செபராங் ஜெயா பொதுச் சந்தைக்கு அருகில் சந்தித்த போது இவ்வாறு கூறினார்.

 

எஸ்.ஜானகி

மேலும், கருத்து தெரிவித்த
எஸ்.ஜானகி,35 போத்தல் சமையல் எண்ணெய் மற்றும் கோழியின் விலையில் ஏற்படும் கடுமையான மாற்றம் நிச்சயமாக பெரும்பாலான மக்களுக்கு, குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று கூறினார்.

“சமையல் எண்ணெய் மற்றும் கோழி ஆகியவை இந்த நாட்டில் பெரும்பாலான மக்களின் அடிப்படை சமையல் பொருட்களாகத் திகழ்கிறது.

“நிச்சயமாக, மானியங்கள் ரத்து செய்யப்படுவதால், சமையல் எண்ணெய் மற்றும் இதர உணவுப் பொருட்களின் விலையும் உயரக்கூடும்.

எனவே, போத்தல் சமையல் எண்ணெய் மானியத்தை ரத்து செய்தால், சந்தையில் பேக்கட் முறையில் விற்கப்படும் சமையல் எண்ணெயின் இருப்பு குறையாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்,” என்றார்.

இதற்கிடையில், கோழி விற்பனையாளர்களின் நிலைமையும் பாதிப்படைகிறது. அவர்களில் பெரும்பாலோர் மத்திய அரசு உடனடியாக அதிகபட்ச சில்லறை விலை (கோழி) அமல்படுத்த வேண்டும். ஏனெனில், உச்சவரம்பு விலை நிர்ணயம் இப்போது வணிகர்களுக்கு நஷ்ட்டத்தை விளைவிக்கிறது.

முன்னதாக, ஜூலை 1 முதல் புத்ராஜெயா கோழிப்பண்ணையாளர்களுக்கு மானியம் வழங்காது என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

மேலும், ஜூலை 1 முதல் இரண்டு முதல் ஐந்து கிலோ போத்தல் சமையல் எண்ணெய்களுக்கான மானியம் ரத்து செய்யப்படுவதாகவும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் (KPDNHEP) விளக்கமளித்தார்.

இந்தத் தீர்மானம், இரண்டு முதல் ஐந்து கிலோகிராம் சுத்தமான போத்தல் சமையல் எண்ணெயின் விலை அதிகரிக்க வழிவகுக்கும் என்று அமைச்சர் விளக்கினார்.