கெபாலா பத்தாஸ்-அண்மையில், மாநில அரசு மக்களுக்கான உதவித்திட்டம்3.0-ல் சிகை அலங்காரம், முடித் திருத்தும் நிலையங்கள் மற்றும் SPA ஆகிய வியாபார உரிமையாளர்களுக்கு ரிம500 நிதியுதவி வழங்குவதாக மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அறிவித்தார்.
மாநில அரசின் இத்திட்டங்களை வரவேற்பதாக முடித் திருத்தும் நிலைய உரிமையாளர்களான கோ.மகேந்திரன் மற்றும் ச.புவனேஸ்வரன் கூறினர். இந்நிதி சிறிய உதவித்தொகையாக இருந்தாலும் முடித் திருத்தும் நிலைய உரிமையாளர்களின் சுமையைக் குறைக்க வித்திடும், என்றனர்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை(பி.கே.பி2.0) அமலாக்கத்தினால் சிகை அலங்காரம், முடித் திருத்தும் நிலையங்கள் நாடு தழுவிய நிலையில் செயல்பட கடந்த ஜனவரி 13 முதல் பிப்ரவரி 4 வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.
“கோவிட்-19 தாக்கத்தைக் கட்டுப்படுத்த கூட்டரசு அரசு குறிப்பாக தேசிய பாதுகாப்பு மன்றம்(எம்.கே.என்) மற்றும் அனைத்துலக வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சு (எம்.ஐ.தி.ஐ) சில தொழில்துறைக்குத் தடைவிதித்தது, இந்தப் பெருந்தொற்றை கட்டுப்படுத்தவே என்பதை அறிவோம். இருப்பினும், இந்த அறிப்பினால் முடித் திருத்தும் நிலைய உரிமையாளர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவதாக,” மதி முடித் திருத்தும் நிலைய உரிமையாளர் மகேந்திரன் கூறினார்.
“இந்த பி.கே.பி 2.0 ஆணை கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் அமலாக்கம் காண்பதால் ஏறக்குறைய மூன்று வாரங்கள் கடை அடைக்கப்பட்டுள்ளது. இதனால் தினசரி வருமானம் இழப்பு ஏற்படுவதோடு, கூடுதலான நிதிச் சுமை குறிப்பாக கடை வாடகை, தொழிலாளர்கள் ஊதியம், பராமரிப்பு கட்டணங்கள் என எதிர்கொள்வதாக,” கோல மூடா இந்திய சிகை அலங்கார உரிமையாளர் சங்கத் தலைவருமான மகேந்திரன் முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு கூறினார்
இந்த பி.கே.பி2.0 அமலாக்கத்தின் போது சில துறைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது போல முடித் திருத்தும் நிலையங்களுக்கும் கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை(எஸ்.ஓ.பி) விதித்து இந்த வியாபாரத்தை வழிநடத்த கூட்டரசு அரசு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இரண்டாவது தலைமுறையாக இத்தொழிலில் ஈடுப்படும் சக்தி முடித் திருத்தும் நிலைய உரிமையாளர் ச.புவனேஸ்வரன் இந்த கடை முடக்கத்தால் அதிகமான நஷ்ட்டத்தையும் பராமரிப்புக் கட்டணங்கள் செலுத்த சிரமம் எதிர்கொள்வதாகவும் கூறினார்.
எனவே, மத்திய அரசு கூடிய விரைவில் முடித் திருத்தும் நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்க வேண்டும். கடந்த ஆண்டு (2020) பல மாதங்கள் அடைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே வியாபாரம் செய்ய தடை விதிப்பது மிகுந்த பண நெருக்கடியை ஏற்படுத்துவதாகக் கூறினார்.
மத்திய அரசு முடித் திருத்தம் கடைகள் செயல்பட அனுமத்திக்கும் தேதியை முன்னதாகவே அறிவிக்க வேண்டும். இதன் மூலம் விதிக்கப்படும் எஸ்.ஓ.பி பின்பற்றி அதன் சம்பந்தப்பட்ட பொருட்கள் வாங்க எளிதாக இருக்கும், என்றார். ஏனென்றால், கடந்த ஆண்டு முடித் திருத்தும் நிலையம் செயல்பட அனுமதி வழங்கிய போதிலும் பொருட்கள் பற்றாக்குறையால் தாமதமாக வியாபாரத்தைத் தொடங்கியதாகக் கூறினார்.
“மாநில அரசு பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக சிறுதொழில் வியாபாரிகளுக்கு வட்டியற்ற கடனுதவி வழங்கும் திட்டத்தை ஆதரிப்பதாகக் கூறினார். இருப்பினும், இம்மாதிரியான உதவிகள் விண்ணப்பித்தும் கிடைக்கப்பெறாத தரப்பினருக்கும் மாநில அரசு உதவிகள் வழங்க உத்தேசிக்க வேண்டும்,” என வட மாநில சிகை அலங்கார சமூகநல இயக்கத் தலைவருமான புவனேஸ்வரன் கூறினார்.
மாநில அரசின் கீழ் உதவிகள் கிடைக்கப்பெறாத தரப்பினருக்கு அத்துறைகள் சம்பந்தப்பட்ட சங்கங்கள் மூலம் நிதியுதவி வழங்க வேண்டும், என கோரிக்கை விடுத்தார்.