புக்கிட் தெங்கா – மாநில அரசு பினாங்கு மாநிலத்தின் கோவிட் -19 நோய்த்தடுப்பு பணிக்குழு (சி.ஐ.டி.எஃப்) மூலம்
வாரந்தோறும் 10விழுக்காடு மூத்தோருக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் கோவிட்-19 தடுப்பூசி கையிருப்பு பொருத்து செயல்படுத்தப்படும்.
“இதுவரை 54 விழுக்காட்டினர் (ஜூலை,30) முதல் மருந்தளவு தடுப்பூசி பெற்றுள்ளனர். வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கி வாரத்திற்கு 10 விழுக்காடு என செப்டம்பர் மாதம் முதல் வாரம் இத்திட்டம் அதன் 100 விழுக்காட்டை பூர்த்தி செய்யும்,” என ஒரே நம்பிக்கை தடுப்பூசி மையத்திற்கு வருகையளித்த போது மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் இவ்வாறு தெரிவித்தார்.
“எனவே, ‘MySejahtera’ செயலி வாயிலாக பதிவு செய்து இதுவரை சந்திப்பு பெறாதவர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்,” என முதல்வர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி ராணி பட்டு; புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூய் சியாவ் லோங்; ஒரே நம்பிக்கை அறக்கட்டளை தலைவர் சுவா சுய் ஹாவ்; அறக்கட்டளை ஆலோசகர் டத்தோஸ்ரீ அருணாசலம் மற்றும் செபராங் பிறை மாநகர் கழகத் தலைவர் மேயர் டத்தோ ரோசாலி மொஹமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் மற்றொரு தடுப்பூசி மையம் செயல்பட
சி.ஐ.டி.எஃப் அனுமதி வழங்கியுள்ளது. இந்த புதிய பி.பி.வி மையம் புக்கிட் மெர்தாஜாம், ‘Vangohh Eminent’ தங்கும் விடுதியில் அமைக்கப்படும்.
இதன் மூலம் மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் வாழும் பொது மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 4,000 மருந்தளவு தடுப்பூசி பெற கூடுதல் வாய்ப்பு கொடுக்கப்படும்.
தேசிய தடுப்பூசி ஒருங்கிணைப்பு செயற்குழு வருகின்ற ஆகஸ்ட், 2-ஆம் தேதி இந்த புதிய பி.பி.வி மையம் செயல்பட அங்கீகாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக, நாளை முதல் ஸ்பாய்ஸ் மாநாடு மையத்தில் மற்றொரு மெகா பி.பி.வி மையம்
தொடங்கப்படுகிறது. இந்த மையத்தில் நாள் ஒன்றுக்கு 5,000 மருந்தளவு தடுப்பூசி செலுத்தி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய
உதவும்,” என முதல்வர் கூறினார்.
கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் தொடங்கி
‘MySejahtera’ செயலி வாயிலாக பதிவு செய்தவர்களுக்கு இன்னும் தடுப்பூசி பெற சந்திப்பு வழங்கப்படாததை குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சிடம் தெரிவிக்கப்பட்டும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை, என்றார்.
தேசிய பாதுகாப்பு மன்ற சந்திப்பு கூட்டத்திலும் இந்த பிரச்சனை குறித்து முன்மொழிந்ததாக முதல்வர் தெரிவித்தார். இருப்பினும், வெளிநாட்டிலிருந்து எப்பொழுது தடுப்பூசி பெறப்படும் என அறியாததால் சம்பந்தப்பட்ட அமைச்சினால் இது குறித்து பதிலளிக்க முடியவில்லை.
எனவே, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் முதல் பதிவு செய்து தடுப்பூசி பெறாத தரப்பினர் மாநில அரசு அல்லது மக்கள் பிரதிநிதிகளிடம் தங்கள் சுயவிபரங்கள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், சேகரிக்கப்படும் தகவல்கள் சம்பந்தப்பட்ட அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டு இந்த பிரச்சனைக்குத் தீர்வுகாணப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தினமும் செயல்படும் இந்த
ஒரே நம்பிக்கை பி.பி.வி மையத்தில் நாள் ஒன்றுக்கு 360 மருந்தளவு செலுத்தப்படுகிறது. பின்பு, நாள் ஒன்றுக்கு 1,000 மருந்தளவு செலுத்த திட்டமிட்டுள்ளது. இதனை செயல்படுத்துவதற்கு ஒரே நம்பிக்கை அறக்கட்டளை கூடுதல் தடுப்பூசி விநியோகம் பெற விண்ணப்பித்ததாகவும், முதல்வர் தெரிவித்தார்.
“மாநிலத்தின் நோய்த்தடுப்புத் திட்டத்தை விரைவுபடுத்த உதவும் வகையில் மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் மற்றொரு பி.பி.வி மையம் தொடங்கியதற்கு ஒரே நம்பிக்கை அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்தார்.