ஜார்ச்டவுன் – மாநில அரசு பினாங்கு மாநிலத்தில் ஏற்படக்கூடிய பேரிடர்களை எதிர்கொள்ளும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மனிதநேய பாதுகாப்புப் பேரிடர் மையத்தை நிறுவ ஒப்புதல் அளித்துள்ளது.
மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் இம்மாநிலத்தில் பேரிடர் மேலாண்மை நோக்கத்திற்காக அனைத்து பொருட்களையும் அல்லது கருவிகளையும் வைக்கும் பிரதான மையமாக உருவாக்கப்படும் என்று கூறினார்.
“இந்த மையத்தை நிறுவுவதற்காக மதிப்பிடப்பட்ட செலவு ரிம6.5 மில்லியன் ஆகும். இது 14,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட ஒரு மாடி கட்டிடம். இதில் லாரி மற்றும் பிற இயந்திரங்கள் நிறுத்தும் இடமாகவும் ;
விமானம் தரை இறங்கும் தலமாகவும் இடம்பெறுகிறது.
”மத்திய செபராங் பிறை மாவட்டத்தின்
ஜாலான் சான் எவ் பின் முக்கிம் 14 இல் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தில் இந்த மையத்தின் கட்டுமானத் திட்டம் செயல்படுத்தப்படும்,” என்று 14வது பினாங்கு சட்டமன்ற ஐந்தாவது தவணை இரண்டாவது கூட்டத்தொடரில் கூறினார்.
பெனாகா மாநில சட்டமன்ற உறுப்பினர் யுஸ்னி மாட் பியாவின் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறினார்.
இதற்கிடையில், நிலம் மற்றும் பொருளாதார மேம்பாடு மற்றும் தகவல்தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ், கிளான் ஜெத்தியைச் சுற்றியுள்ள வளாகங்கள் மற்றும் கட்டிடங்களின் நிர்வாகத்தை முதல்வர் கார்ப்பரேஷன் (சி.எம்.ஐ) ஏற்கும் திட்டத்தையும் மாநில அரசு பரிசீலிக்கும் என்று கூறினார்.
“பெங்காலான் வெல்டில் நடைமுறைப்படுத்தப்படும் நிர்வாகத்தைப் போலவே கிளான் ஜெத்தி பகுதிக்கு பயன்படுத்தப்படும். அங்கு தொடர்புடைய நிலம் CMI-க்கு சொந்தமானது மற்றும் நிலத்தில் உள்ள வணிகக் கட்டிடங்கள் வாடகை அல்லது குத்தகை ஒப்பந்த ஆவணத்தின் மூலம் அசல் குடியிருப்பாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குத்தகைக்கு விடப்படும்.
“இதன் மூலம், கிளான் ஜெத்தி பகுதியில் உள்ள கட்டிடங்கள் நன்கு பராமரிக்கப்படுவதை மாநில அரசு உறுதி செய்யும்,” என்று பெங்காலான் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் கூய் ஜி சென் முன்மொழிந்ததற்கு பதிலளித்தார்.