செபராங் ஜெயா – மலேசிய மலிவுவிலை மதுபான எதிர்ப்பு இயக்கத்தின் (எம்.ஏ.சி.எல்.எம்) தலைவர் பி. டேவிட் மார்ஷல் கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டி.பி.கே.எல்) சட்டவிரோத மலிவுவிலை மதுபானங்களை விற்கும் கடைகளுக்கு நிர்ணயித்துள்ள புதிய வழிகாட்டுதல்களை வரவேற்கிறது. எனவே, இச்செயல்பாட்டினை பிற ஊராட்சி கழகங்களும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
“புதிய வழிகாட்டுதலில் எந்த வகையான மதுபானங்களை விற்க முடியாது என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆயினும், இந்த மதுபானங்கள் சீன மருத்துவக் கடைகளில் விற்க அனுமதிக்கப்படுவதாக மட்டுமே குறிப்பிடுகிறது,’’ என்றார்.
“மலிவுவிலை மதுபானங்களை சட்டவிரோதமாக விற்கும் கடைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோதனையிட வேண்டும். இது குடிப்போதையில் வாகனம் ஓட்டுவதை விட மலிவுவிலை மதுபானங்கள் அருந்துவதன் மூலம் அதிகமான மக்கள் இறக்க நேரிடுகிறது.
மலேசியாவில் உரிமம் பெறாத கள்ள மதுபான தயாரிப்பு விற்பனை மிக பெரிய அளவில் நடக்கிறது.
“இந்த வகை மதுபானம், ஒரு பிரபலமான ‘பிராண்டின் லேபள்’ கொண்டு விற்கப்படுகிறது. இது நகரத்தில் உள்ள மளிகைக் கடைகளில் பரவலாகக் கிடைக்கிறது, ” என்று அவர் கூறினார்.
இந்த வகையான கடைகள் பொதுவாக வணிகப் பகுதிகளின் உயர் மட்டங்களில் இயங்குகின்றன, சில சமயங்களில் அவை வெளிநாட்டினரால் நிர்வகிக்கப்படுகின்றன என்று மார்ஷல் கூறினார்.
“இந்த மது போத்தல்களில் சுங்க வரி செலுத்தியதற்கான ஸ்டிக்கர் இல்லை. இந்த வரி மோசடி செய்யும் தரப்பினர் மீது தான் அதிகாரிகள் குறிவைக்க வேண்டும்,” என்றார்.
அதிகாரிகள் உரிமம் பெற்ற மதுபான உற்பத்தியாளர்கள் தயாரிக்கும் மதுபானங்களுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். இதன் மூலம் மலிவுவிலை மதுபான விநியோகம் குறைக்க முடியும், என்றார்.
“அதிகப்படியான குடிப்பழக்கத்தை நாங்கள் ஊக்குவிக்க விரும்பவில்லை,எனினும் மலிவுவிலை அதனை ஊக்கப்படுத்தும்.
“இதைச் செய்வதற்கான காரணங்கள் குறித்து அரசாங்கம் தெளிவுப் பெற வேண்டும்.
“இது அரசியல், மதம் அல்லது கலாச்சாரம் பற்றியது அல்ல. மாறாக சுகாதார மற்றும் சமூக பிரச்சனையாக விளங்குகிறது.
“நாங்கள் மது விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. ஆனால் சில கடைகளில் சட்டவிரோத மலிவுவிலை மதுபானங்கள் எளிதில் பெறுவது குறித்து நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
“மலிவுவிலை மது அருந்துவதால் பி40 குழுவைச் சேர்ந்த குடும்பங்களில் அதிகமான இறப்புகள் மற்றும் குடும்ப பிளவைக் கண்டிருக்கிறேன். ஆகவே, இப்பிரச்சனையைக் களைய பிரத்தியேக திட்டம் தேவை” என்று மார்ஷல் கூறினார்.
கோலாலம்பூரில் அதிகமான மதுபான கடைகள் செயல்படுகின்றன. அதனையடுத்து கிள்ளான், கெடா, சுங்கைப்பட்டாணி & கூலிம், மற்றும் பினாங்கில் செபராங் பிறையில் அதிகமான கடைகள் செயல்படுகின்றன என நாடு முழுவதும் 35 ஊராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டது.
“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில், எங்கள் உறுப்பினர்கள் வீட்டு வன்முறை வழக்குகளின் அதிகரிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டனர். இந்த அறிக்கையில் நிதி பிரச்சனையால் மது அருந்தியதால் இக்குடும்பப் பிரச்சனை ஏற்பட்டது,” என மார்ஷல் கூறினார்.
மலிவுவிலை மதுபான பிரச்சனையைக் களைய மத்திய அரசு சிறந்த கொள்கையை சட்டப்பூர்வமாக அமல்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.இப்பிரச்சனைக் தகுந்த தீர்வு கிடைக்கும் வரை தனது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அவர் சூளுரைத்தார்.