இவ்வாண்டுக்கான வரவுச்செலவு திட்டத்தில் பினாங்கு மாநில நம்பிக்கை கூட்டணி அரசு அறிவித்திருந்ததை போல மலிவு மற்றும் நடுத்தர மலிவு விலை வீடுகளுக்கு மதிப்பீட்டு வரி விலக்கு அளித்துள்ளன. இரண்டு ஊராட்சி மன்றங்களுக்கும் பினாங்கு மாநில குடியிருப்பாளர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என பினாங்கு மாநகர் கழக வளாகத்தில் மலிவு விலை மற்றும் நடுத்தர மலிவு விலை வீடுகளுக்கு மதிப்பீட்டு வரி விலக்கு வழங்கும் நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்து அறிவித்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
இவ்வாண்டு மதிப்பீட்டு வரி விலக்கு வழங்கியதில் இரண்டு ஊராட்சி மன்றங்களும் தத்தம் ரிம8,058,628.78 மற்றும் ரிம 6,035,077.00 செலவினை எதிர்கொள்கின்றனர். மத்திய அரசு அறிமுகப்படுத்திய பொருள் சேவை வரியினால்(ஜி.எஸ்.தி) பொதுமக்கள் அதிகமான பண சுமையினை எதிர்நோக்குகின்றனர். எனவே, பொது மக்களுக்கு உதவிப்புரியும் வகையில் மாநில அரசு இந்த மதிப்பீட்டு வரி விலக்கினை வழங்கியுள்ளதாக மாநில முதல்வர் தமதுரையில் குறிப்பிட்டார். சுமார் 76,790 மலிவு விலை மற்றும் நடுத்தர மலிவு விலை வீட்டு உரிமையாளர்கள் இவ்வாண்டு இச்சலுகையை பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
மாநில அரசாங்கம் பினாங்கு மாநகர் கழம் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக வாயிலாக பொருள் சேவை வரியை ஏற்றுக்கொள்வதோடு அனைத்து சொத்துகளுக்கும் குறிப்பாக வர்த்தகரீதியான சொத்துகளுக்கும் 6% மதிப்பீட்டு வரி குறைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு ஊராட்சி மன்றங்களும் ரிம 19.36கோடி செலவினை ஏற்கின்றனர். பினாங்கு மாநில அரசு தமது திறமையான நிர்வாகத்தின் மூலம் கூடுதல் இலாபம் கிடைக்கப்பெற்று பொதுமக்களுக்கு சலுகைகள் வழங்க முடிகிறது என விரிவுப்படுத்தினார் மாநில முதல்வர்.
மலிவு விலை மற்றும் நடுத்தர மலிவு விலை வீடுகளுக்கு மதிப்பீட்டு விலக்கு நிகழ்வு அறிமுக விழாவில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ், பினாங்கு மாநகர் கழக தலைவர் மேயர் பத்தாயா பிந்தி இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.