மலேசியச் சாதனைப் புத்தகத்தில் இஸ்திரி பெட்டி சேகரிப்பாளர் தியாகராஜன் சாதனை

ஜார்ச்டவுன்: பழங்கால இரும்புகள், பொருட்கள் சேகரிப்பது சிலருக்கு விலைமதிப்பற்றதாகவும் உணர்ச்சிப்பூர்வமான மதிப்பையும் வழங்குகிறது.

சிம்பாங் அம்பாட்டைச் சேர்ந்த பழங்காலப் பொருட்கள் சேகரிப்பாளரான ப. தியாகராஜன், தனது 140 பழங்கால இஸ்திரி பெட்டிகள் மற்றும் பல பொருட்களையும் கண்காட்சிக்கு வைக்க ஓர் அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டுள்ளார்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக பழங்காலப் பொருட்களை சேகரித்து வருவதாக கெடா விளையாட்டு மன்ற கராத்தே பயிற்சியாளரும் யோகா பயிற்றுநருமான தியாகராஜன் கூறினார்.

தனது தந்தைக்குச் சொந்தமான மண்ணெண்ணெய் விளக்கு தனது முதல் பழங்கால சேகரிப்புப் பொருள், என்றார்.

“என்னுடைய இஸ்திரி பெட்டிகள் மலேசியா, ஜெர்மனி, யுனைடெட் கிங்டம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து சேகரிக்கபட்டது.

“கராத்தே மற்றும் யோகா பயிற்றுவிப்பாளராக எனது பணியின் காரணமாக நான் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்றேன்.

“நான் எப்போதும் பழங்காலப் பொருட்களைத் தேடுவதில் மிகுந்த ஆர்வம் கொள்வேன். பண்டையக் காலத்தில்
மக்கள் அப்பொருட்களைப் பயன்படுத்தி எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிய முற்படுவேன். அப்பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கப்பெற்றால், நான் அவற்றை வாங்குவேன்,” என்று அவர் முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு கூறினார்.

தியாகராஜன், தான் வாங்கிய மிகவும் விலை உயர்ந்த இஸ்திரி பெட்டி ஜெர்மனியில் இருந்து ரிம1,500 விலையில் வாங்கப்பட்டது, என்றார்.

“நான் உள்நாட்டில் வாங்கிய இஸ்திரி பெட்டிகளின் விலை ரிம500 முதல் ரிம550 வரையில் இடம்பெறுகிறது,” என்று அவர் கூறினார். அவருடைய இஸ்திரி பெட்டிகளின் சேகரிப்பு ஏறக்குறைய ரிம70,000 மதிப்புடையது, என்றார்.

செப்புப் பாத்திரங்கள் (50), பழைய பேட்மிண்டன் ராக்கெட்டுகள் (40), சைக்கிள்கள் (15), மோட்டார் சைக்கிள்கள் (7) மற்றும் பீங்கான் மற்றும் கண்ணாடிப் பாத்திரங்கள்(20) ஆகியவை அவரது பிற பழங்கால சேகரிப்புப்
பொருட்கள் பட்டியலில் இடம்பெறுகின்றன.

“என்னுடைய பழங்காலப் பொருட்கள் அனைத்தும் சிம்பாங் அம்பாட்டில் உள்ள எனது கராத்தே மையத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வருங்காலத்தில் எனது அருகாட்சியகத்திற்கு தி-யாகா பழங்கால சேகரிப்பு மையம் என்று பெயரிடத் திட்டமிட்டுள்ளேன்.

தியாகாவின் முகுதியான ஆர்வம் மலேசிய சாதனைப் புத்தகத்தில் (MBR) ஒரு தனிநபரின் மிகப் பழமையான இஸ்திரி பெட்டிகள் சேகரிப்புக்காக தனது பெயரைப் பதிவுச் செய்ய வழிவகுத்தது.

அண்மையில் சிம்பாங் அம்பாட்டில் உள்ள கோஜு ரியு கராத்தே மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இத்தகைய சாதனைக்காக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் மலேசியர் இவர் என்றால் மிகையாகாது.

இந்த விருதினை MBR அலுவலக மேலாளர் லீ பூய் லெங் தியாகாவிடம் வழங்கி கெளரவித்தார். மலேசிய குற்றத்தடுப்பு அறக்கட்டளை பினாங்கு பிரிவு துணைத் தலைவர் டத்தோஸ்ரீ புலவேந்திரன் கயம்பு அவர்களால் தியாகாவின் இந்த முயற்சிக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.