மலேசியாவில் முதல் சமயக்கல்வி மையம் உதயம் – பேராசிரியர்

Admin
இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, இந்து தர்ம மாமன்ற தேசியத் துணை தலைவரும் மாநிலத் தலைவருமான வெ.நந்தகுமார் மற்றும் இந்து அறப்பணி வாரிய அதிகாரிகள்

மலேசியாவில் உள்ள அதிகமான ஆலயங்களில் தற்போது அர்ச்சகர்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றனர். எனவே, உள்நாட்டிலேயே அர்ச்சகர்கள உருவாக்கும் எண்ணத்தில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மற்றும் இந்து தர்ம மாமன்றம் இணைந்து முதல் சமயக்கல்வி மையம் நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளது.

மலேசியாவின் முதல் சமயக்கல்வி மையம் பினாங்கில் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக பினாங்கு இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து வரவழைக்கப்படும் அர்ச்சகர்களுக்கு விசா விண்ணப்பம், குடிநுழைவுத் துறை விண்ணப்பம் என செலவினங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதோடு இந்நாட்டின் பல ஆலயங்களில் அர்ச்சகர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.

எனவே, எதிர்காலத்தில் அர்ச்சகர்கள் பற்றாக்குறை பிரச்சனையைக் களைய இந்து அறப்பணி வாரியம் சமயக்கல்வி மையம்அமைக்க எண்ணம் கொண்டுள்ளது. இந்த சமயக் கல்வி மையத்தின் பாடத்திட்டங்கள், அர்ச்சகர்களுக்கான கையேடுகள் அனைத்தும் இந்து தர்ம மாமன்றம் வழிநடத்தும் என்றார் பேராசிரியர்.

இந்த சமயக் கல்வி மைய பாடத்திட்டங்கள் தமிழ் மொழி, சமஸ்கிருதம் அல்லது இரண்டு மொழிகளில் நடத்தப்படுமா என உறுதி செய்யவில்லை.

இந்தியாவின் குருக்குலம் சாயலில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும். ஆர்வமுள்ள இளைஞர்கள் முழு நேரமாக அல்லது பகுதி நேரமாக டிப்ளோமா கற்கலாம் என இந்து தர்ம மாமன்ற தேசியத் துணை தலைவரும் மாநிலத் தலைவருமான வெ.நந்தகுமார் கூறினார். தேசிய அளவில் இந்தப் புதிய முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.