மலேசிய இந்து சங்கம் குளுகோர் வட்டாரப் பேரவைக்கு குமரேசன் நிதியுதவி

Admin
kumaresan 1

குளுகோர் – சிறு வயதிலேயே பிள்ளைகளுக்கு படிப்பறிவோடு, சமய அறிவையும் புகட்ட வேண்டும். இளைய பருவத்தில் தங்கள் பிள்ளைகள் சமுதாயத்தின் மத்தியில் சிறந்தவர்களாகவும் பண்பு மிக்கவர்களாவும் திகழ்வதற்கு சமய ஈடுபாடு, ஆன்மீகம் போன்ற நற்பண்புகள் முக்கியம் என பெற்றோர்களை பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் கேட்டுக் கொண்டார்.

 

பிள்ளைகளுக்கு குடும்பத்தில் நல்ல பழக்க வழக்கங்கள் ஊட்ட வேண்டும். வீட்டில் கற்பிக்கப்படும் பழக்க வழக்கங்கள்தான் அவர்களின் நடவடிக்கையை வெளியில் சித்தரிக்கும் என்பதால் பிள்ளைகளின் வளர்ப்பு பெற்றோர்கள் கவனம் செலுத்துவது இக்காலத்தில் அவசியம் என்றார்.

 

இதில் சமய ஈடுபாடு, ஆன்மீகம், மற்றும் கல்வி அறிவு போன்றவை முக்கியம் என்பதால் தங்கள் பிள்ளைகளை ஆலயங்கள், அரசு சாரா அமைப்புகள் ஏற்று நடத்தும் தேவார வகுப்பு, திருமுறை ஓதுதல், சமய வகுப்பு ஆகியவற்றில் கலந்து கொண்டு பயன்பெற பிள்ளைகளுக்கு ஆர்வமூட்ட வேண்டும் என குமரேசன் வலியுறுத்தினார்.

 

மலேசிய இந்து சங்கம் குளுகோர் வட்டாரப் பேரவையின் 46-ஆவது திருமுறை ஓதும் விழாவில் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்ட குமரேசன் இந்திய சமூதாயத்திற்கு சிறப்பாக சேவையாற்றி வரும் மலேசிய இந்து சங்கத்தை பாராட்டினார். இச்சங்கத்தின் சேவை தொடர்ந்து மக்களுக்கு சென்றடைய வேண்டும் எனும் ஆவலையும் தமதுரையில் வெளிப்படுத்தினார்.

kumaresan

மேலும், தலைநகரில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான திருமுரை ஓதும் போட்டிக்கு பங்கேற்கும் போட்டியாளர்களின் போக்குவரத்து வசதிக்கு உதவும் நோக்கில் அத்தினத்தன்று ரிம5,000 நிதியுதவியும் வழங்கினார்.

சுமார் 167 மாணவர்கள் மலேசிய இந்து சங்கம் குளுகோர் வட்டாரப் பேரவையின் திருமுறை ஓதும் போட்டியில் பங்கேற்று பயன் பெற்றனர்.