ஆயர் ஈத்தாம் – ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்களால் தீபாவளி பண்டிகை இனிதே விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை தினத்தை முன்னிட்டு பல கொடைவள்ளல்கள் ஆண்டுத்தோறும் பல தொண்டுகள் வழங்கி வருகின்றனர். அவ்வகையில் மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவை ஏற்பாட்டில் மூன்றாவது முறையாக ‘அன்பான சமூகத்துடன் நற்பணி’ என்ற பெயரில் அன்பளிப்பு வழங்கப்பட்டன.
தீபாவளிப் பண்டிகை சில வாரங்களில் கொண்டாடப்படும் வேளையில் வசதி குறைந்த குடும்பங்களும் இத்தினத்தை மகிழ்வுடன் கொண்டாடும் பொருட்டு இந்து சங்க புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவை தேர்ந்தெடுக்க ப்பட்ட 30 குடும்பங்களுக்குப் பரிசுக்கூடை கொடுக்கப்பட்டன. இந்தப் பரிசுக்கூடையில் அரிசி பொட்டலம் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், ஷான் குழந்தைகள் காப்பகம் மற்றும் இராமகிருஷ்ண ஆசிர பிள்ளைகளுக்கும் தீபாவளி அன்பளிப்பாக பணம் மற்றும் பரிசுக்கூடை வழங்கப்பட்டன.
“நாம் அனைவரும் ஒவ்வொருவரின் பின்புலத்தைப் பார்க்காமல் அனைத்து பண்டிகைகளையும் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டும். பொதுவாகவே, தேவைப்படுவோருக்கு உதவிக்கரம் நீட்டாமல் செல்வந்தராகவும் வளமான வாழ்க்கை வாழ்வதிலும் எவ்வித பயனும் இல்லை. எனவே, நமது மாநில அரசாங்கமும் வசதி குறைந்தவர்களுக்கு நிதியுதவி வழங்குவதில் முன்னுரிமை காட்டும் என்பது வெள்ளிடைமலை,” என இந்நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்த புலாவ் திக்கூஸ் சட்டமன்ற உறுப்பினர் கிறிஸ்டோபர் லீ தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மலேசிய பினாங்கு இந்து சங்கத் தலைவர் திரு. முனியாண்டி, மாநகர் கழக உறுப்பினர் திரு. காளியப்பன், மின்னல் குடும்ப கழகத் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ சிவா நாயர், தஞ்சோங் பினாங்கு ‘தேஸ்கோ’ பேரங்காடி பிரதிநிதி திரு. ரூபன், பினாங்கு இந்து சங்க சமூகநலப் பிரிவின் தலைவர் தொண்டர்மணி முனிசரன், புக்கிட் பெண்டேரா பேரவையின் தலைவர் விவேக நாயகன் தர்மன் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
படம் 1: பரிசுக்கூடை பெற்றுக்கொண்ட பொது மக்களுடன் மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவை உறுப்பினர்கள்