ஜார்ச்டவுன் – மலேசிய திராவிடர் கழக உறுப்பினர்கள் பினாங்கு மாநிலம் முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அலுவலகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகை மேற்கொண்டனர்.
குறுகிய நேரத்தில் நடைபெற்ற இச்சந்திப்புக் கூட்டத்தில் கழகத்தின் எதிர்கால திட்டங்களையும் நிகழ்வுகளையும் முன் வைத்தனர்.
தற்போது இக்கழகம் ஜாலான் பாகான் லுவார் பகுதியில் அமைந்திருக்கும் கடைவீட்டின் மூன்றாவது மாடியில் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் அவ்விடத்தில் நிகழ்வுகள் நடத்துவதற்கும் பொதுமக்களைச் சந்திப்பதற்கும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் புதிய இடத்தை அடையாளங்காணுமாறு இச்சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி ஆலோசனை முன் வைத்தார்.
இந்தக் கழகம் 1946-ஆம் ஆண்டு துவக்கப்பட்டு தற்போது பினாங்கு மாநிலத்தில் 13 கிளைகள் கொண்டு செயல்படுகிறது. இதில் 5,000 உறுப்பினர்கள் செவ்வென சேவையாற்றி வருகின்றனர்.
மலேசிய திராவிடர் பினாங்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் குணாளன், செயலாளர் மருதமுத்து, பொருளாளர் முனியாண்டி, இளைஞர் பிரிவுத் தலைவர் விக்னேஷ் பாபு, மகளிர் அணித் தலைவி யோகேஸ்வரி மற்றும் செயலவை உறுப்பினர்கள் கொம்தாரில் அமைந்திருக்கும் முதல்வர் அலுவலகத்திற்கு வருகை மேற்கொண்டனர்.
இக்கழகத்தின் வருடாந்திர திட்டங்கள் குறிப்பாக ஆறு மெகா திட்டங்கள் பற்றிய பரிந்துரைகள் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டு நிதியுதவி கோரப்பட்டது. இப்பரிந்துரை குறித்து பரிசீலிக்கப்படும் என முதல்வர் கூறினார்.
மாநில அரசாங்கத்துடன் நல்லிணக்கத்தைப் பேணி சிறந்த நல்லுறவை வளர்க்கும் பொருட்டு இச்சந்திப்புக் கூட்டம் ஏற்பாடுச் செய்யப்பட்டதாக அதன் துணைத் தலைவர் குணாளன் தெரிவித்தார்.