ஜோர்ச்டவுன் – மலேசிய பினாங்கு இந்து சங்கம் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அலுவலகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகை மேற்கொண்டனர்.
மலேசிய பினாங்கு இந்து சங்கத் தலைவர் முனியாண்டி, துணை தலைவர்களான ‘தொண்டர்மணி‘ முனிசரன் மற்றும் தர்மன், செயலாளர் மோகன், பொருளாளர் கலாராணி, துணை பொருளாளர் நவரசன், மகளிர் அணி தலைவி ‘தொண்டர்மணி‘ சரோஜா, இளைஞர் அணி தலைவர் சிவகுரு மற்றும் உறுப்பினர் அப்பன் ஆகியோர் கொம்தாரில் அமைந்திருக்கும் முதல்வர் அலுவலகத்திற்கு வருகை மேற்கொண்டனர்.
முப்பது நிமிடங்களுக்கு நடைபெற்ற இச்சந்திப்புக் கூட்டத்தில் மலேசிய பினாங்கு இந்து சங்கத்தின் எதிர்கால திட்டங்களையும் நிகழ்வுகளையும் முன் வைத்தனர். கோவில் மாநாடு, சமய மாநாடு மற்றும் மூடுந்து (van)வாங்குவதும் எதிர்கால திட்டங்களில் அடங்கும்.
பினாங்கு பொது மருத்துவமனையிலிருந்து பெற்றுக்கொள்ளாத சடலங்களுக்கு முறையான ஈமச்சடங்குகள் மேற்கொண்டு உதவுவதன் நோக்கமாக மூடுந்து (van) வாங்க இணக்கம் மாநில முதல்வரிடன் எடுத்துரைத்தனர். மேலும், வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஈமச்சடங்குகள் மேற்கொள்ள குறைந்த கட்டணம் வழங்கவும் இத்திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
இதனிடையே, மலேசிய பினாங்கு இந்து சங்கம் மாநில அரசின் ஒத்துழைப்பும் உதவியும் நாடுவதாக அச்சந்திப்புக் கூட்டத்தின் போது குறிப்பிட்டிருந்தனர். எனவே மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் மலேசிய பினாங்கு இந்து சங்கத்தின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என குறிப்பிட்டார்.
மேலும், பினாங்கு மாநில அரசுடன் இணைந்து பினாங்கு 2030 இலக்கை அடைய மலேசிய பினாங்கு இந்து சங்கம் வற்றாத ஆதரவையும் ஒத்துழைப்பும் வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார் அச்சங்கத்தின் துணை தலைவர் தர்மன். மலேசிய பினாங்கு இந்து சங்க நிர்வாகத்தினர் மாநில முதல்வருக்கு பொன்னாடை போற்றி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்